Friday, April 19, 2019

மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில்சூறைக்காற்றுடன் பலத்த மழைமின்னல் தாக்கி 5 பேர் காயம்



சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்தனர்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 04:45 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சில இடங்களில் மழை பெய்தது. சங்ககிரி சுற்று வட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சங்ககிரி சுங்கச்சாவடி மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. அருகில் இருந்த இரும்பு கம்பம் முறிந்து தொங்கியது. மேலும் சுங்கச்சாவடியில் இருந்த வழிகாட்டி பலகைகள் பலத்த காற்றினால் உடைந்து கீழே விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஆவரங்கம்பாளையம் பகுதியில் இருந்த உயரமான விளம்பர இரும்பு கம்பம் முறிந்து அருகில் உள்ள ஓட்டல் மீது விழுந்தது. இதில் ஓட்டல் பலத்த சேதம் அடைந்தது. மேலும் மின் கம்பமும் உடைந்து விழுந்தது. இதன் காரணமாக சங்ககிரி பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. சங்ககிரியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் பலத்த காற்றால் வாக்குச்சாவடிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் வாக்காளர்களுக்கு சின்னம் தெரியவில்லை அதனால் வாக்காளர்கள் அவதிபட்டனர். வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் தங்களுடைய செல்போன் வெளிச்சத்தில் வாக்காளர்கள் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜலகண்டாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தது. மின் கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையொட்டி வாக்குச்சாவடியில் ஓட்டு போட சென்ற வாக்காளர்கள் சின்னம் சரியாக தெரியாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சூரப்பள்ளி, ஆவடத்தூர், சவூரியூர், தோரமங்கலம், கரிக்காப்பட்டி ஆகிய பகுதிகளில் மாலையில் மழை பெய்தது. சூரப்பள்ளியில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் மின்கம்பங்கள் காற்றினால் உடைந்து விழுந்தது. இதனால் ஜலகண்டாபுரம் சுற்றுப்புறப்பகுதியை சேர்ந்த அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது.

எடப்பாடி பூலாம்பட்டி, சித்தூர், ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்தது. வேப்பமரத்துபட்டி பகுதியில் 3 மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தது. பூலாம்பட்டியை அடுத்த கூடக்கல் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் வயல்களில் மழை நீர் தேங்கியது. இதில் பருத்தி, நெல், எள் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மாலையில் பெய்த மழையால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதம் ஆனது. அதைதொடர்ந்து மழை நின்று போனதால் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை மீண்டும் நடைபெற்றது.

ஏற்காட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதையொட்டி ஏற்காடு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பின்பு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் நாகலூர், கரடியூர், கொளகூர், சொரக்காப்பட்டி, பூமரத்தூர், முளுவி, புத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த கிராமங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேச்சேரி சந்தைப்பேட்டை பகுதியில் மழை பெய்தது. இதனிடையே சந்தைப்பேட்டை அருகே உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதையொட்டி அ.தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த கட்சி பிரமுகர் மரத்தடியில் அமர்ந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது.

இதில் எறப்பரெட்டியூர்காட்டுவளவை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் கோவிந்தன் (வயது 48), சூராக்கவுண்டன்காட்டுவளவை சேர்ந்த லோகநாதன் (33), பெரியசாமி (31), எறப்பரெட்டியூரை சேர்ந்த பா.ம.க.பிரமுகர்கள் குமார் (40), ரெட்டியூரைசேர்ந்த பிரபு (36) ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து லோகநாதன், பெரியசாமி, குமார், பிரபு ஆகியோருக்கு மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவிந்தனுக்கு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...