Sunday, April 14, 2019

வார்த்தை போர் வாக்குகளாக மாறுமா?

Updated : ஏப் 13, 2019 16:03 | Added : ஏப் 13, 2019 15:21 |




சென்னை : தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்குமான வார்த்தைப் போரும் வலுவடைந்துள்ளது. ஆனால், இதுபோன்ற வார்த்தைப் போர் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

அரசியலில், 'லாவணிக் கச்சேரி' எப்போதும் புதிதில்லை. ஒரு காலத்தில் அவை வெறும் குழாயடிச் சண்டை போல இல்லாமல், அவரவர் அரசியல் அறிவுத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில், குறிப்பாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி என்று தமிழக அரசியல் இருதுருவ அரசியல் ஆன பின்னர், கருத்து மோதல்கள் வார்த்தைப் போர்களாக வடிவெடுத்தன. இது மக்கள் பிரச்னைகளை, அரசியல், கொள்கை, கோட்பாடுகளைப் பற்றிப் பேசாமல், மக்களை திசைதிருப்பி வெறும் 'லாவணி'யாக, ஒரு கட்டத்தில் குழாயடிச் சண்டையாக மாற்றுவதாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இந்த தேர்தல் பிரச்சார துவக்கத்திலேயே, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர், துணை முதல்வர்களைப் பற்றிக்குறிப்பிடும்போது 'அடிமைகள்' என்றார். பின்னர், 'மண்புழு' என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி, ''மண்புழு விவசாயி நண்பன்'' என்று குறிப்பிட்டுவிட்டு, இப்படியே ஸ்டாலின் பேசிக்கொண்டே இருந்தால், நான் கிராமத்துக்காரன், நான் பதில் சொன்னால் 'காது ஜவ்வு கிழிந்துவிடும்,' என்றார். அதற்கு திருச்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''ஆட்சி கவிழ்ந்து, வாழ்க்கையே கிழியப் போகிறது'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இப்படி எதிரும் புதிருமாக, முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் வார்த்தைப்போர் நடத்துவது, அரசியல் நோக்கர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அவர்கள் கூறுகையில், '' ஆளும்கட்சி, தன் ஆட்சிக்காலத்தின் சாதனைகளை, பணிகளை, எதிர்கால இலக்குகளை சொல்லி மக்களிடம் பிரசாரம் நடத்தவேண்டும். எதிர்க்கட்சிகள், ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும். மக்களின் பாதிப்புகளை எடுத்துக்காட்டி பிரசாரம் செய்யவேண்டும். மேலதிகமாக, அவரவர் கட்சிக்கொள்கையின் இலக்குகளை மக்களிடம் எடுத்து வைக்கவேண்டும்.
ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சியில் ஆரம்ப கட்டத்தில், சில 'நாலாந்திர' பேச்சாளர்களின் மூலம், அநாகரிகமாக பிரசாரங்கள் நடந்தன. அதற்கு 'தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான்' போல பல 'பிராண்டு' பேச்சாளர்களே இருந்தனர்.இப்போதோ அந்த 'பிராண்டு' பேச்சாளர்களின் இடத்தை கட்சித் தலைவர்களே கைப்பற்றிக்கொண்டனர். இது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இந்த வார்த்தைப் போர்களால், ஒருபோதும் ஓட்டுக்களைப் பெறமுடியாது. மக்களின் முகச்சுழிப்பிற்குத்தான் ஆளாகவேண்டியிருக்கும்,'' என்கின்றனர்.
தமிழக அரசியல் நாகரீகமான திசையில் பயணிக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.10.2024