Wednesday, April 15, 2020

கோவை அரசு மருத்துவமனை விடுதியில் சரியான நேரத்துக்கு உணவின்றித் தவிக்கும் மருத்துவர்கள்

கோவை  14.04.2020

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதி உணவுக்கூடம் மூடப்பட்டதால் பயிற்சி மருத்துவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் நேற்று சரியான நேரத்துக்கு உணவில்லாமல் தவித்தனர்.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:

''கடந்த மார்ச் மாதத்துடன் எங்களது ஓராண்டுகால பயிற்சி நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக எங்களது சேவை காலம் மேற்கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அடுத்த பேட்ச் பயிற்சி மருத்துவர்கள் வந்துவிட்டபோதிலும், நாங்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறோம்.

இரண்டு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், விடுதியில் உள்ள மெஸ் பணியாளர்கள் நேற்று முன்தினம் கிளம்பிச் சென்றுவிட்டனர். இதனால், பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் சாப்பாடு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்லை.

இதுதொடர்பாக ஒருவர் ட்விட்டரில் பதிவிடவே, அதற்கு சுகாதாரத் துறை செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும், நேற்றுமுன்தினம் இரவும், நேற்று காலை, மதிய நேரங்களில் சரியான நேரத்தில் உணவு கிடைக்கவில்லை. நேற்று காலை 10.30 மணிக்குதான் உணவு கிடைத்தது. அதேபோல, மதியம் 3.30 மணி வரை சாப்பாடு கிடைக்கவில்லை. நாங்களே வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. சரியான உணவும், குடிநீரும் இல்லாமல் எங்களால் எப்படி பணி செய்யும் முடியும்.

வார்டுகளில் நோயாளிகள் கவனிப்பு, வெளிநோயாளிகள் பரிசோதனை, கரோனா வார்டில் பணி என பெரும்பாலான பணிகளை முதுநிலை மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும்தான் மேற்கொள்கின்றனர். ஆனால், எங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள்கூட செய்துதரப்படவில்லை. எனவே, எங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள், என்-95 முககவசம், பிபிஇ கிட் ஆகியவற்றை அளிக்க வேண்டும்''.

இவ்வாறு பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நேற்று மாலை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் ஆகியோர், மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேவையானவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட இரு முதுகலை மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் 'ஸ்வாப்' பரிசோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.


கோவையில் இருந்து ஒரு பயிற்சி மருத்துவரின் கடிதம்

''அடுத்தடுத்து இன்னலுக்கு மேல் இன்னலாக பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 28ஆம் தேதியோடு எங்களது ஒருவருட இன்டர்ன்ஷிப்பை முடித்துவிட்டு மருத்துவப் பட்டதாரி ஆகியிருக்க வேண்டிய எங்களது 2014-வது பேட்ச், கோவிட்-19 எனும் தேசிய அவசரநிலையைக் கருத்தில் கொண்டு எங்களது சேவைகாலம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிலேயே நாங்கள் ஓரளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டோம். ஏனென்றால் எங்களுக்கு அடுத்து செய்ய நிறைய திட்டங்கள் இருந்தன.

இப்போது அதெல்லாமும் தடம்புரண்டு விட்டது. இன்னமும் வதை செய்கிற வகையில் கரோனா பணிக்கென ரிசர்வ் ஹவுஸ் சர்ஜனாக வைத்திருந்த எங்களை ஏற்கனவே நாங்கள் பார்த்து முடித்த ரெகுலர் வார்ட் போஸ்டிங்கிலேயே மீண்டும் பணியமர்த்தினர், எங்களுக்கு அடுத்த பேட்ச்சில் ஹவுஸ் சர்ஜன்கள் வந்துவிட்ட போதிலும். இப்போது சரியான தற்காப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ததால் கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு PGகளுக்கு கரோனா வந்துவிட எங்களது மெஸ் பணியாளர்கள் 'இனி வேலை செய்யமாட்டோம். எங்களுக்கு பயமாயிருக்கிறது' என்று கூறி கிளம்பிவிட்டனர்.

இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் மேலிடத்தில் உள்ளவர்களைப் பார்க்கச் சென்றபோது 'சாப்பாடு உங்கள் பிரச்சினை. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று அலட்சியமாகப் பேசி அனுப்பிவிட்டனர். பிறகு அனாமதேயமாக ஒரு கடிதம் எழுதி அதை ட்விட்டரில் போட்டபிறகுதான் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கவனத்திற்கு இவ்விஷயம் சென்றுள்ளது. 'சாப்பாடு இன்று இரவுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். காலை என்ன செய்வதென்று பார்த்துக் கொள்ளலாம்' என்று நேற்று கூறியுள்ளனர்.

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்று காலைவரை உணவு ஏற்பாடு செய்து தரவில்லை. உணவும் குடிநீரும் மட்டும் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் எங்களது பணிகளுக்கு செல்லமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் யாரும் கடவுளர்கள் இல்லை. சாதாரண மனிதர்கள். மருத்துவம் பயின்ற மனிதர்கள். அவ்வளவுதான். இப்படி சொல்ல, கரிசனமின்றி நடந்துகொள்ள எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசும் அரசு இயந்திரமும் எங்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது''.

இவ்வாறு பயிற்சி மருத்துவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024