Wednesday, April 15, 2020

ரேஷன் கடைகளில் தினசரி 150 பேருக்கு டோக்கன் மூலம் தரமான பொருட்கள் விநியோகிக்க வேண்டும்: கூட்டுறவு சங்கம் பதிவாளர் சுற்றறிக்கை

சென்னை  15.04.2020

ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். கூட்டம் சேருவதைத் தவிர்க்க டோக்கன்கள் மூலம் தினசரி 150 பேருக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கும் நிவாரண உதவியாக ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கும் மேற்கண்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதன்படி அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்துக்கான பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை ஏப்.15-ம் தேதிக்குள் கடைகளுக்கு அனுப்பி முடிக்க வேண்டும். நாளை முதல் இம்மாதம் 30-ம் தேதிக்குள் மே மாதத்துக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு அனுப்பி முடிக்கவேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள், ஒதுக்கீடு அளவுக்கு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடைகளுக்குப் பொருட்களை அனுப்பும்போதே அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.தரம் குறைந்த அத்தியாவசியப்பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தால், அதை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்காமல், கிடங்குக்கு திரும்ப அனுப்பி, தரமான பொருட்களை பெற்று கடை விற்பனையாளர்கள் விநியோகிக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகல் நடைமுறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இளம்பச்சை நிற டோக்கன்களை தேவையான அளவு அச்சிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 150 டோக்கன்கள் வழங்கப்பட்டு காலை, மாலை என தலா 75 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். டோக்கனில் நாள், நேரம் குறிப்பது குறித்து பின்னர் அறிவுறுத்தப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024