சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரில் 6 பேர் குணமடைந்துள்ளனர்: சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் தகவல்
சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சேலம் மண்டல கண்காணிப்பு சிறப்புக் குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா.
15.04.2020
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 18 பேரில், 6 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என சிறப்பு கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சேலம் மண்டல கரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்களான டாஸ்மாக் இயக்குநர் கிர்லோஸ்குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் மஞ்சுநாதா ஆகியோர் தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் ராமனுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், காவல் துணை ஆணையர் தங்கதுரை, எஸ்பி., தீபா காணிகர், மாவட்ட வருவாய் அலுவலர் சுதாகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் பேசும்போது, “144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கரோனா சமூக பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 18 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 6 பேர், நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்” என்றனர்.
தொடர்ந்து சேலம் மாநகராட்சிப் பகுதிகள், எடப்பாடி நகராட்சிப் பகுதிகள் ஆகியவற்றில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை சிறப்புக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment