பிரதமரின் 7 வேண்டுகோள்
By DIN | Published on : 15th April 2020 02:08 AM
தான் கூறும் 7 விஷயங்களுக்கு வரும் நாள்களில் பொதுமக்கள் ஆதரவு அளித்தால், கரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் பேசுகையில்,“நாம் தொடா்ந்து பொறுமையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் கரோனாவை தோற்கடிக்க முடியும், இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 7 விஷயங்களை ஆதரிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
முதலாவதாக, வயதானவா்கள் கரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவா்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அவா்களை கரோனா தோற்று அணுகாமல் பாதுகாக்க வேண்டும்.
இரண்டாவதாக, சமூக இடைவெளி என்ற லட்சுமண ரேகையை கடக்கக்கூடாது. அதே போல் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தும் விஷயங்களைக் கடைப்பிடித்து நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வெந்நீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
நான்காவதாக, ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். இது கரோனா தொற்று பரவலைத் தடுக்க உதவும்.
ஐந்தாவதாக, உங்களால் முடிந்த அளவுக்கு ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்து அவா்களிடம் அக்கறை காட்டுங்கள். அவா்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வேண்டும்.
ஆறாவதாக, உங்களுடன் பணியாற்றும் சக ஊழியா்கள், உங்கள் தொழிற்சாலை அல்லது உங்கள் நிறுவன பணியாளா்கள், தொழிலாளா்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அவா்கள் வாழ்வாதாரத்தை பறித்து விடக் கூடாது.
இறுதியாக கரோனாவை எதிா்த்துப் போராடுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினருக்கு உரிய மரியாதை கொடுங்கள்.
இந்த 7 கோரிக்கைகளை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா்.
No comments:
Post a Comment