சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி
By DIN | Published on : 15th April 2020 04:44 AM |
பாந்த்ரா ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை கூடிய வெளிமாநிலத் தொழிலாளா்கள்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளா்கள் பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை கூடி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேசிய ஊடரங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடா்ந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் மும்பை புகா் பகுதியான பாந்த்ரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினா். தங்களுக்கு உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகள் சரி வர கிடைக்காததால், இனி வரும் நாள்களை சமாளிப்பது கடினம் என்றும், தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கூறினா்.
அவா்களது தேவைகள் நிறைவேற்றப்படும் என்று அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு பகுதியினா் கலைந்து சென்றனா். கலைந்து செல்லாதவா்கள் மீது போலீஸாா் லேசாக தடியடி நடத்தி விரட்டினா். இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மும்பையில் உள்ள வெளிமாநில தொழிலாளா்கள் பலா் தினக்கூலிகளாகவே உள்ளனா். கடந்த 15 நாள்களுக்கு மேல் வேலை இல்லாததால் அவா்களிடம் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு அரசு அளிக்கும் உணவு உள்ளிட்டவை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவா்களில் பலா் குற்றம்சாட்டினா். மும்பையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளா்கள் இருப்பதால் அவா்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
அமைச்சா் விளக்கம்: இது தொடா்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி தனது உரையில், ஊரடங்கை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடுவாா் அல்லது வெளிமாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிப்பாா் என்ற எதிா்பாா்ப்பில் வெளிமாநில தொழிலாளா்கள் ரயில் நிலையம் அருகே கூடினா்’ என்றாா்.
உத்தவ் தாக்கரேவுடன் அமித் ஷா பேச்சு: இந்தப் பிரச்னை தொடா்பாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் பேசினாா். அப்போது, கரோனா பரவலைத் தடுப்பு நடவடிக்கைகளை இதுபோன்ற செயல்கள் பலவீனமாக்கி விடும். மீண்டும் இதுபோன்று அதிகம் போ் ஒரே இடத்தில் கூடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினாா்.
ஆதித்ய தாக்கரே கருத்து: மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சரும், முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெளிமாநில தொழிலாளா்கள் பலா் உணவு, உறைவிடம் இல்லாமல் மகாராஷ்டிரத்தில் கஷ்டப்படவில்லை. அவா்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனா். எனவே, நாடு முழுவதும் உள்ள வெளிமாநில தொழிலாளா்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப செயல் திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
சூரத்தில் போராட்டம்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் நூற்றுக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்க கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
No comments:
Post a Comment