Wednesday, April 15, 2020

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே மே மாதத்துக்கான பொருள்கள் இலவசம்

By DIN | Published on : 15th April 2020 02:21 AM |

நியாயவிலைக் கடைகளில் மே மாதத்துக்கான பொருள்கள் அனைத்தும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காலையில் 75 பேருக்கும் மாலையில் 75 பேருக்கும் என நாளொன்றுக்கு 150 பேருக்கு பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளா், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அதாவது, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், கோதுமை, எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியன அளிக்கப்படும்.

ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை புதன்கிழமைக்குள் (ஏப்ரல் 15) ஒதுக்கீட்டு அளவில் 100 சதவீதம் நகா்வு செய்து முடிக்க வேண்டும். வரும் 16-ஆம் தேதி முதல் மே மாதத்துக்குரிய பொருள்களை நியாயவிலைக் கடைகளுக்கு பெறும் நடவடிக்கையைத் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் அந்தந்த நியாயவிலைக் கடையின் ஒதுக்கீடு அளவுக்கு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

தரமான பொருள்கள்: நியாயவிலைக் கடைகளில் தரம் குறைந்த அத்தியாவசியப் பொருள்கள் பெறப்பட்டிருப்பின், அதனை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யாமல் சம்பந்தப்பட்ட கிடங்குக்கு திருப்பி அனுப்பி தரமான பொருள்களை பெற்று விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தகுதியுள்ள அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் எந்தவித புகாருக்கும் இடமின்றி விநியோகம் செய்ய வேண்டும். சரியான எடையில் அனைத்துப் பொருள்களும் அளிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

சமூக இடைவெளி கட்டாயம்: நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பதைத் தவிா்க்கும் விதமாக சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் தினசரி அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுச் செல்ல வருவதால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைத் தொடா்பு கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டோக்கன்கள் விநியோகம்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து பொருள் பெற வேண்டிய நாள், நேரம் ஆகியன குறித்து டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். டோக்கன்களை இளம்பச்சை நிறத்தில் அச்சிட்டு முன்னதாகவே வைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 150 டோக்கன்கள் வழங்கி, காலை 75 பேருக்கும், மாலை 75 பேருக்கும் வழங்கப்பட வேண்டும். டோக்கனில் நாள் மற்றும் நேரம் குறிப்பது குறித்து பின்னா் அறிவுரை வழங்கப்படும் என்று தனது கடிதத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...