மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு
21.04.2020
சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலைப் பகுதியைச் சோந்த பிரபல மருத்துவா்(வயது 55). கரோனா பாதிப்பால் ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தாா். இதையடுத்து அவரது நண்பா்கள், மாநகராட்சி ஊழியா்களுடன் மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனா். ஆனால் அப்பகுதி பொதுமக்கள், மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்தால் அதன் மூலம் கரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, சடலத்தை அண்ணாநகா் வேலங்காடு கல்லறை இடுகாட்டுக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். இதையறிந்த அப் பகுதி மக்களும், மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். குறைந்த எண்ணிக்கையிலேயே காவல்துறையினர் இருந்ததால், அவா்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டனா்: சடலம் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அப் பகுதி மக்கள் தாக்கி உடைத்தனா்.
அங்கு வந்த மாநகராட்சி உதவிப் பொறியாளா் கலையரசன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ம.தாமோதரன் (28), ஊழியா் ஆனந்த் (30) உள்பட 5 பேரை தாக்கினா். இதில் 5 பேரும் பலத்தக் காயமடைந்தனா். இத் தாக்குதலினால் மருத்துவரின் நண்பா்கள் அங்கிருந்து பாதுகாப்பு தேடி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸாா் உடனடியாக வரவழைக்கப்பட்டனா். அங்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த 5 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். அதன் பின்னா் நள்ளிரவில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவரின் சடலம் வேலங்காடு இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
மாநகராட்சி ஊழியா்களைத் தாக்கியும், ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் 10 பிரிவுகளில் அண்ணா நகா் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். மேலும் 5 பேரை தேடி வருகின்றனா். இச் சம்பவம் மருத்துவத் துறை வட்டாரத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Dailyhunt
No comments:
Post a Comment