Saturday, April 18, 2020




புதுக்கோட்டை டூ திருநெல்வேலி: ஊரடங்கு காலத்தில் ஒரு பாசப் பயணம்

By -சா. ஜெயப்பிரகாஷ் | Published on : 18th April 2020 01:57 PM |



வேலைக்காகப் புதுக்கோட்டையில் தங்கியிருந்த பெண், தனது இரண்டரை வயது மகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு, ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற பாசப் பயணம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.


திருநெல்வேலி அருகே மருதன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (22). இவரது கணவர் முருகேசன். கட்டடத் தொழிலாளி. இவர்களுக்கு இரண்டரை வயது மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். குடும்ப வறுமையைச் சமாளிக்க நெல்லையிலிருந்து வெகுதொலைவில் (சுமார் 350 கிமீ தொலைவில்) உள்ள புதுக்கோட்டையில் ஊரகப் பணிகளில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார் பவித்ரா.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் சஞ்சலம் அடைந்த பவித்ராவின் மனம், 21 நாட்கள்தானே என மனதைத் தேற்றிக் கொண்டார். ஆனால், மிகக் குறைந்த ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த பவித்ராவுக்கு அடுத்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக வந்த தகவல் பேரிடியாக விழுந்தது.

அதேநேரத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தனது மகன் மகேஸ்வரன் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவல் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது ஊர்ப் போய்ச் சேரமாட்டோமா, மகனைப் பார்க்க மாட்டோமா என்ற கவலையில் ஆழ்ந்தார் பவித்ரா.

ஊரடங்குக் கால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலிருந்த துணைவன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புதுகை செல்வாவுக்கு தகவல் கிடைக்க, நேரில் சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினார். சட்டப்படியான உதவிகளைப் பெறுவதற்காக காவல் துறை உதவியையும் அவர் நாடினார். இதையடுத்து பவித்ராவை நெல்லைக்கு அனுப்பி வைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

முகநூலில் புதுகை செல்வா ஒரு பதிவையிட்டார். நேரடியாக நெல்லை வரை அவரை அனுப்பி வைக்க இயலாவிட்டாலும் கூட, இடையே ஒவ்வோர் இடத்தில் ரிலே ரேஸ் போல இறக்கிவிட்டு, அங்கிருந்து வேறு தன்னார்வலர்கள் மூலம் நெல்லைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கூட யோசித்திருக்கிறார்கள்.

முகநூலில் இந்தப் பதிவைப் பலரும் பகிர, உதவிக்குப் பலரும் முன்வந்தார்கள். ஆனால், அனுமதி பெறுவது அவ்வாறு தனித்தனியே வாங்க முடியாதே பவித்ராவின் உண்மை நிலையைக் காவல் துறையினர் மூலம் உறுதிப்படுத்திவிட்டு ஆன்லைன் மூலம் புதுக்கோட்டை டூ நெல்லைக்கு இ-அனுமதி பெறப்பட்டது.

கொடையாளர்களின் உதவியுடன் கார் ஒன்றை ஏற்பாடு வெள்ளிக்கிழமை பிற்பகலில் அனுப்பி வைத்தனர். அந்தக் காரும் மதுரையில் பழுதடைந்தது. உடனடியாக மதுரையிலிருந்த டாக்டர் தேவ்ஆனந்த் என்பவர் தனது காரில் பவித்ராவை அழைத்துக்கொள்ள அங்கிருந்து கார் பயணம் நெல்லைக்குத் தொடர்ந்தது.

இதற்கிடையே நெல்லையில் உதவி ஆட்சியராகப் பணியாற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுரு பிரபாகரன் என்ற ஐஏஎஸ் அதிகாரி முகநூல் வழியே தகவலறிந்து புதுகை செல்வாவைத் தொடர்பு கொண்டுள்ளார்.

பவித்ரா வரும் வாகன எண்ணைப் பெற்றுக்கொண்டு வழியே எங்கெல்லாம் காவல் துறையின் சோதனைச் சாவடிகள் இருக்குமோ அங்கெல்லாமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சென்ற பவித்ராவுக்கு இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது. சிறுவனை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு அவரது தந்தை மருதன்புதூர் சென்றுவிட்டார். நெல்லையிலிருந்து அந்த ஊருக்கு 30 கிமீ தொலைவு. இரவோடு இரவாக அங்கேயுள்ள காவலர்களின் உதவியை நாடிய பவித்ரா ஒரு வழியாக இரவு 12 மணிக்கு மருதன் புதூர் சென்றடைந்தார்.

ஆங்காங்கே உதவிய தன்னார்வலர்களின், மனமும், ஈடில்லா செயலும், பவித்ராவை அவரது மகன் மகேஸ்வரனிடம் கொண்டு சேர்த்தது. உடல் நலக்குறைவாக இருந்த மகேஸ்வரனும் நலம் பெற்றிருக்கிறான்.

வெறும் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்துக்காக 350 கிமீ தொலைவிலிருந்து வந்து ஓர் இளம்பெண் அறியாத ஊரில் பணியாற்றி வந்திருக்கிறார் என்பது ஒரு சாம்பிள்தான். இன்னும் எத்தனைப் பேரோ, ஊரடங்கு பல தகவல்களை ஊரறியச் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...