அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம் ; 'டாப் கியரில்' வெயில் சுட்டெரிக்கும்
Added : மே 04, 2020 00:17
சென்னை : கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் அபாயம் உள்ளது.
'காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம். ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.கேரளாவில் துவங்கும் இந்த மழை, ஜூன், ஜூலை மாதங்களில், கேரளா, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, ஜம்மு - காஷ்மீர் வரை பரவும்.பருவமழை துவங்க, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோடை வெயில் தீவிரமாகியுள்ளது.
கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது; வரும், 28 வரை நீடிக்கும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது.'அக்னி நட்சத்திர காலத்தில், மற்ற நாட்களை விட, வெயில் அதிகரிக்கும்' என, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கூறப்படுகிறது. அதன்படியே, இந்த காலத்தில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.ஆனால், வானிலை ஆய்வு மையத்தின், அறிவியல் ரீதியான ஆராய்ச்சி கணிப்பில், கத்திரி வெயில் குறித்து, எந்த தனிப்பட்ட அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்று வீசும்.ஆனாலும், வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத, தமிழக உள் மாவட்டங்களில், சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் எகிறலாம்.எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அந்த மையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment