Monday, May 4, 2020


சிறப்பு ரயிலில் பயணம்; யார், யாருக்கு அனுமதி?

Updated : மே 04, 2020 00:57 | Added : மே 03, 2020 23:15 

சென்னை: 'மாநில அரசின் அனுமதியின்றி, சிறப்பு ரயில்களில், பயணியர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் தொடரும் ஊரடங்கால், சொந்த மாநிலம்; ஊர்களுக்கு செல்ல முடியாமல், ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தவிப்போரை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வகையில், சிறப்பு ரயில்களை இயக்கும்படி, பல்வேறு மாநில அரசுகளும், ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தன. அதையேற்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியர், மாணவர்கள் ஆகியோர், சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, சில சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மாநில அரசு அனுமதியுடன், அழைத்து வரப்படும் பயணியர் மட்டுமே, சிறப்பு ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவர்.இந்த பயணியரை, நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர, மாநில அரசுகள் பிரத்யேக ஏற்பாடுகள் செய்ய, கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் கேட்டுக் கொண்ட சிறப்பு ரயில்களை தவிர, வேறு எந்த ரயிலும் இயக்கப்படாது. தனியாக அல்லது குழுவாக வரும் யாருக்கும், நிலையத்தில் அனுமதி இல்லை. எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கு முடியும் வரை, மக்கள் எந்த நோக்கத்திற்காகவும், ரயில் நிலையங்களுக்கு வர வேண்டாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024