Friday, May 29, 2020

திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்!


திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்!

ராஜாவுடன் புரு

ஆர்.சி.ஜெயந்தன்  22.05.2020

சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மறைந்தபோது திரையுலகம் கண்ணீரில் கரைந்தது. ‘இளையராஜாவின் இசை நிழல் மறைந்துவிட்டது’ என்று ஒரு சக இசைக் கலைஞர் ட்வீட் செய்திருந்தார் என்றால், புருஷோத்தமனின் திறமையும் பங்களிப்பும் உங்களுக்குப் பிடிபடுகிறது அல்லவா? அதைவிட, இரைச்சலைத் துறந்துவிட்டு, மற்ற கருவிகளை ஆரத் தழுவியபடி, இதமாய் நம் செவிகளில் துள்ளிய அவரது ‘ட்ரம்ஸ்’ இசை சற்றுத் தூக்கலாக இடம்பெற்ற சில பாடல்களைக் கூறினாலே போதும், உங்கள் இதயம் தாள கதியில் துடிக்கத் தொடங்கி அவரை நினைவில் கொண்டுவரும்.

ஆரம்பமே அசுரப் பாய்ச்சல்!

‘அன்னக்கிளி’யில் கிராமிய வாழ்வின் சாரத்தை இசையில் கொண்டுவந்திருந்த இளையராஜா, தன்னைக் ‘கிராமிய ஸ்பெஷலிஸ்ட்’ என்று கட்டம் கட்டியதை விரும்பவில்லை. அதைத் உடைத்தெறிய அடுத்த ஆண்டே ‘கவிக்குயில்’ படத்தில் ‘கிளாசிகல்’ இசையால் தாலாட்டினார். இளைஞர் இளையராஜாவின் புத்திசை வேண்டிப் படங்கள் குவிந்தபோது, சளைக்காமல் இரவு பகலாக இசையமைத்தார். அடுத்து ஒரு ‘மாடர்ன்’ கதை அமையாதா என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது ‘ப்ரியா’திரைப்படம் அவரிடம் வந்து சேர்ந்தது.

நவீன வாழ்க்கையைப் பேசும் அந்தப் படத்தின் இசையில், நவீனத்தின் விளையாட்டை விஸ்வரூபமாக நிகழ்த்திக்காட்டினார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ஸ்டீரியோபோனிக்’ (stereophonic) தொழில்நுட்பத்தில் அந்தப் படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் ஒலிப்பதிவு செய்தார்.

அப்போது அவருக்குப் பக்கபலமாக இருந்த பலரில், ‘அன்னக்கிளி’ தொடங்கி அவரது குழுவில் ட்ரம்ஸ் இசைக் கலைஞராக இடம்பிடித்துவிட்ட புருஷோத்தமன் மிக முக்கியமானவர். ‘நாம் இசையமைப்பாளராகி ‘ட்ரம்ஸ்’ இசையை பயன்படுத்தும்போது, அதில் புலி எனப் பெயர் வாங்கியிருந்த புரசைவாக்கம் ஆங்கிலோ இந்தியக் கலைஞரான நோயல் கிராண்டைப் பயன்படுத்த வேண்டும்’ என்று எண்ணியிருந்தார் இளையராஜா. மெல்லிசை மன்னர்களின் இசையென்றால் நோயலின் ட்ரம்ஸ் இசைக்காமல் எந்த ஒலிப்பதிவும் நடக்காது.

அப்படிப்பட்டவர் சாலை விபத்தில் திடீரென இறந்தபோது, அவரது இடத்தை நிரப்பத் தகுதியான ஒரே ட்ரம்மர் புருஷோத்தமன் மட்டும்தான் எனத் திரையிசை உலகம் பேசியது. அப்போது ராஜாவின் தனிப்பெரும் சொத்தாக புருஷோத்தமன் மாறியிருந்தார். ‘ப்ரியா’ படத்தில் இடம்பெற்ற ‘டார்லிங்... டார்லிங்... டார்லிங்... ஐ லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ’ பாடலில், புருஷோத்தமன் சிங்கப்பூரிலிருந்து தருவித்திருந்த ரொட்டோ ட்ரம்ஸ் (Roto drums) தாளக் கருவியை முதல் முறையாகப் பயன்படுத்தி, காதலின் வசீகர உற்சாகத்தை அதன்வழியே ஒலிக்க வைத்தார். அந்தப் படத்தின் பின்னணி இசையிலும் புருஷோத்தமனின் ட்ரம்ஸுக்கு அதிக வேலை கொடுத்திருந்தார் ராஜா.

நிழலாகப் பின்தொடர்ந்த கலைஞன்

அறிமுகமான நான்கே வருடங்களில் 50 படங்களைத் தாண்டியிருந்த இளையராஜாவின் இசைப் பட்டியலில் சரிபாதிக்கும் மேல் நூறுநாள் படங்கள். தோல்வி அடைந்த படங்களும் கூட, ராஜாவின் பாட்டுக்காக ஐந்து வாரங்களைக் கடந்து ஓடிய அதிசயம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்படிப்பட்ட 80-களில், அவருக்கு ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம். ஏனென்றால், நட்சத்திரங்களின் கால்ஷீட் பற்றிச் சிந்திக்கும்முன், ராஜாவின் கால்ஷீட்டுக்காகத் தயாரிப்பாளர்கள் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் தவம் கிடந்த நாட்கள் அவை.

வந்து குவிந்த படங்களைப் பார்த்து ராஜா சளைத்துவிடவில்லை. முடிந்துவிட்ட படங்களுக்கான பின்னணி இசைச் சேர்ப்புப் பணி ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும். காட்சிகளுக்கான இசைக்குறிப்புகளை வாத்திய இசைக் கலைஞர்களிடம் கொடுத்து, ‘வாசித்து ஒத்திகை செய்துகொண்டிருங்கள்’ எனக் கூறி பொறுப்பைத் தனது இசை நடத்துநரிடம் விட்டுவிட்டு, பக்கத்து தியேட்டரில் நடக்கும் பாடல்பதிவுக்கு ஓடுவார்.

இளையராஜா இரண்டு காலால் ஓடினால் அவரது இசை நடத்துநர் நான்கு காலால் ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டுக்கும் நடுவில் பாடல் கம்போஸிங்குக்காகப் புதிதாக ஒப்புக்கொண்ட படங்களின் இயக்குநர்கள் ராஜாவின் அறையில் காத்திருப்பார்கள். அதிகாலை 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் தாண்டிய இரவுப் பறவையாக பணியாற்றிய ராஜாவின் ‘காலம் கனிந்ததும்...கதவுகள் திறந்ததும்.. ஞானம் விளைந்ததும்...

நல்லிசை பிறந்ததும்!’ அப்போது நடந்தேறியது. அதனால்தான் ‘நிழல்கள்’ படத்தில் கனவுகளைத் துரத்தும் ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை வரிகளாக்கியபோது, ‘மடை திறந்து தாவும் நதியலை நான்...’ பாடலில் ‘புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே!’ என்று ராஜாவின் வெற்றியை ஒரு நேரடி சாட்சியாக கண்டு எழுதினார் காவியக் கவிஞர் வாலி.

இப்படி ராஜா மடை உடைந்து தன் திறமையைக் கொட்டிக்கொண்டிருந்த காலத்தில், அவரது கனவுகளையும் இசைக் குறிப்புகளையும் தோள்களில் தூக்கிச் சுமந்த, தனது இசை நடத்துனராக இசைக்குழுவைக் கட்டி மேய்க்க இளையராஜா தேர்ந்துகொண்ட திறமைக் கடல் புருஷோத்தமன். ராஜாவின் தொடக்ககால நண்பர்களில் ஒருவராக அவருடன் பயணிக்கத் தொடங்கி, பின் அவரது ட்ரம்மர் என்பதையும் தாண்டி, அவரது இசை நடத்துநராக, ராஜாவின் நிழலாக மாறிப்போனார் புரு.

இசைப்பதிவுக் கூடத்தில் மலைபோல் பணிகள் குவிந்துகிடந்தாலும், தனது படைப்பாற்றலை விட்டுக்கொடுத்துவிடாமல் அனைத்தையும் நிர்வகித்தார் புரு. அதனால்தான், புருவின் ஒருங்கிணைக்கும் திறமையை மட்டுமல்ல; அவரது தாள வாத்தியத் திறமையையும் தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டார் ராஜா.

‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘மடை திறந்து தாவும் நதியலை நான்..’ பாடலின் தொடக்கக் காட்சியிலேயே ‘ரோட்டோ ட்ரம்ஸ்’ வாசித்தபடி திரையில் தோன்றும் புருஷோத்தமனின் முகம் மட்டுமல்ல; அவர் ட்ரம்ஸ் இசையும் நம்மை ஆட்கொண்டது இப்படித்தான். அந்தப் பாடலில் மட்டுமல்ல; ராஜாவின் ஆயிரமாயிரம் நவீன இசைப்பாடல்கள் அனைந்திலும் மடை திறந்துகொண்டு புது வெள்ளமாகப் பாய்ந்தது புருஷோத்தமனின் ட்ரம்ஸ் இசை.


மென் மனதுக்கார்!

இளையராஜாவைப் போலவே புருவின் இசைப் பயணத்தில் மற்றொரு பிரபலம், அவருடைய அண்ணனும் இந்தியாவின் தலைசிறந்த கிடார் இசைக் கலைஞர்களில் ஒருவருமான ஆர்.சந்திரசேகர். ‘இளைய நிலா பொழிகிறதே..’ பாடலுக்கு கிடார் வாசித்தவர்தான் சந்திரசேகர். 70-கள் தொடங்கி, இவர் வாசிக்காத தென்னிந்திய இசையமைப்பாளர்களோ, இந்திப்பட இசையமைப்பாளர்களோ இல்லை எனும் அளவுக்கு 45 ஆண்டுகளைக் கடந்து இன்னும் பிஸியாக வாசித்துக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்தது ராஜமன்னார்குடியில். அங்கே கோயில் கொண்டிருக்கும் ராஜகோபால சுவாமிக்கு நடைபெறும் 18 நாள் சித்திரைப் பெருவிழாவில், விதம்விதமான வாகனங்களில் ஊரை வலம்வருவார் உற்சவர். அப்போது முக்கிய வீதிகளில் ஆங்காங்கே நின்று அவர் ஓய்வெடுக்கும் இடங்களில் எல்லாம் பிரம்மாண்ட வாத்திய இசைக் கச்சேரிகள் தூள் பறக்கும். அவற்றை விடிய விடிய கண்கொட்டாமல் பார்த்தும், கேட்டுமே இந்தப் பாமணி நதிக்கரைச் சகோதரர்களுக்கு இசையின் மீது பக்தி பிறந்திருக்கிறது.

பின் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்தபோது, சந்திரசேகர் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டே கிடார் கற்றுக்கொள்ள, புருஷோத்தமனோ இளங்கலையில் கணிதம் படித்தபடி தனக்குப் பிடித்தமான ட்ரம்ஸ் இசையைக் கற்றுக்கொண்டார். இசைச் சந்தையில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களையும் இசைக்கருவிகளையும் பணம் செலவழித்து தருவித்து, அதை முயன்று பார்த்துவிடும் இந்தச் சகோதரர்களின் தேடல், அன்றைக்கு ரொம்பவே பிரபலம். அதைவிடப் பெரும் தேடல், இவர்கள் இருவருமே, கருவிகளைச் சுயம்புவாகக் கற்றுக்கொண்டார்கள் என்பது. சந்திரசேகர் ஒரே இடத்தில் கட்டுண்டு கிடக்க விரும்பாத சுதந்திரப் பறவை. புருஷோத்தமனோ ராஜாவின் இசையில் கட்டுண்டுபோன மென்மனதுக்காரர். மெட்டுக்களுக்கான ராஜாவின் தாளயிசை உருவாக்கங்களில் தன் பங்கை அளிப்பதில் தாகம் கொண்டவராக இருந்தார்.

‘அலைகள் ஓய்வதிலை’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடந்துகொண்டிருந்தது. சிங்கப்பூரிலிருந்து புருஷோத்தமன் தருவித்திருந்த புதிய எலெக்ட்ரானிக் தாள இசைக் கருவியான ‘ரிதம் பேட்’ பார்சல் நேரே பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்தது. ஆர்வத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல், பாடல் பதிவு இடைவேளையில் பார்சலைப் பிரித்து ரிதம் பேடை வாசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் புரு. அங்கே வந்த இளையராஜா, ரிதம் பேடின் ஒலியைக் கேட்டு, அன்று பதிவான ‘புத்தம் புதுக் காலை’ பாடலின் இண்டர்லூடில் ஒலிக்கும், ‘ம் டக்கும்.. ம் டக்கும்..’ என்ற தாள இசைத் துணுக்கை புருவை இசைக்கச் செய்து, ரசிகர்களின் இதயம் வரை வந்து ‘ரிதம் பேடா’ல் சொடுக்கினார் ராஜா.

பொதுவாக, அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் நோட்ஸ் சொல்லிக்கொடுத்து, அவர்களைக் கச்சிதமாக ஒருங்கிணைக்கும் இசை நடத்துநர்களுக்குத் திரைப்படத்தில் ‘இசை உதவி’ என டைட்டில் போடும் வழக்கம் இருந்தது. ஆனால், புருஷோத்தமன் அதை அடியோடு மறுத்துவிட்ட அதிசயக் கலைஞர். அப்படிப்பட்டவரை துபாயில் நடந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் ராஜா, பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது, அந்த மகா கலைஞனின் முகத்தை ரசிகர்களின் கண்கள் அழுந்தப் படம் பிடித்துக்கொண்டன.

புருஷோத்தமனின் ட்ரம்ஸ் இசை, உற்சாகத்தின் எல்லையில் நின்று களி நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒன்று ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கொட்டட்டும்’ பாடல். அதில் வரும், ‘தாளங்கள் தீராது… பாடாமல் ஓயாது... வானம்பாடி ஓயாது...’ என்ற வரிகள் அப்படியே புருஷோத்தமனின் இசை வாழ்க்கையுடன் பொருந்திப்போவதில் வியப்பில்லை. இளையராஜாவின் பாடல்கள் இந்தப் பூமியில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, அதில் ஆதார தாளகதியாகப் பின்னிப்பிணைந்துவிட்ட புரு இசைத்த ‘தாளங்கள் தீரவே தீராது’.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024