சேலத்தில் கைதிக்கு கரோனா: எஸ்ஐ உள்பட 15 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்
சேலம் 28.05.2020
சேலத்தில் இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இருந்த எஸ்ஐ உள்பட போலீஸார் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவர், சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரைக் கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோர், சேலம் இரும்பாலை காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தனர். புகாரைத் தொடர்ந்து, இரும்பாலை காவல் நிலைய எஸ்ஐ மோகன் தலைமையிலான போலீஸார், பழ வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரைக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அவர் சேலம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.
எனவே, பழ வியாபாரியைக் கைது செய்த எஸ்ஐ உள்ளிட்ட போலீஸார், காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது, பணியில் இருந்த போலீஸார் என 15 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு 2 நாட்களுக்குப் பின்னர் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. போலீஸாரின் குடும்பத்தினரும் அவரவர் வீடுகளில் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். இரும்பாலை காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. காவல் நிலைய வளாகம் இரு நாட்களுக்குப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment