விமானத்தில் சேலம் வந்தவர்களில் 5 பேருக்கு கரோனா தொற்று
சேலம் 28.05.2020
சேலத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.
கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 60 நாட்களாக சேலம் காமலாபுரம் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு அனுமதியுடன் நேற்று முன்தினம் சேலம் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.
இதையடுத்து, சென்னையில் இருந்து 56 பயணிகளுடன் நேற்று முன்தினம் ஒரு விமானம் சேலம் வந்தது. பின்னர் 32 பயணிகளுடன் சேலத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னை சென்றடைந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் வந்த விமான பயணிகள் அனைவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பெண் பயணி ஒருவர் உள்பட 5 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். மற்ற விமானப் பயணிகள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். சேலம் விமான நிலையத்தில் புதிய அட்டவணைப்படி செவ்வாய் மற்றும் வியாழன் தவிர மற்ற நாட்களில் மட்டும் விமானம் இயக்கப்படும் என்பதால், இன்று (மே 28) விமானம் இயக்கப்படவில்லை.
No comments:
Post a Comment