காமராஜ் பல்கலை பதிவாளர் ராஜினாமாவில் சர்ச்சை
Added : மே 04, 2020 00:40
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பொறுப்பை, சங்கர் நடேசன் ராஜினாமா செய்ததற்கு, துணைவேந்தரை சுற்றியுள்ள சிலர் செய்த, 'அரசியல்' தான் காரணம் என்ற, சர்ச்சை எழுந்து உள்ளது.
இப்பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், செல்லத்துரை பதவி காலத்தில் நடந்த, விதிமீறிய பணி நியமனங்கள், முறைகேடுகள், பல்கலையின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்தன. குற்றச்சாட்டு துணைவேந்தராக, கிருஷ்ணன் பதவியேற்றதும், பல்கலையின் நிலை மாறும் என்ற நம்பிக்கை, கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மத்தியில் துளிர்விட்டது.அதற்கேற்ப, துணைவேந்தரின் நடவடிக்கைகளும் ஆரம்பத்தில் இருந்தன. தற்போது, அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.செல்லத்துரையின் பதவி காலத்தில் இருந்த துதிபாடிகள் மற்றும் போட்டுக் கொடுத்து அரசியல் செய்வோர் கை, மீண்டும் ஓங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் எதிரொலியே, சங்கர் நடேசனின் ராஜினாமா என்கின்றனர், நடுநிலை பேராசிரியர்கள். அவர்கள் கூறியதாவது: பல்கலை ரெகுலர் பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. 2019 டிசம்பரில், பொறுப்பு பதிவாளராக சங்கர் நடேசன், சிண்டிகேட் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்.காலப்போக்கில், இவர் கையெழுத்திடும் அலுவலராக மட்டுமே பார்க்கப்பட்டார். 'நாக்' கமிட்டி ஆய்வு செய்ய இருந்ததால், பல்கலை கட்டடங்களை பராமரிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவால், கமிட்டியின் ஆய்வு தள்ளிப்போயுள்ளது.ஐவர் குழுஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், திட்ட மதிப்பீடு இருந்தால், 'டெண்டர்' விட்டு பணி மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.
இருந்தும், டெண்டர் விடாமல் பணி மேற்கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு பணி மதிப்பீட்டையும், 90 ஆயிரம் ரூபாய்க்குள் தயாரித்து, பதிவாளர் கவனத்திற்கு வராமல், பல பணிகள் நடக்கின்றன. இதன் பின்னணியில், இன்ஜினியர் ஆனந்த், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், ஜெயவீரபாண்டியன், அசோக்குமார், முருகேசன் ஆகியோர் இடம் பெற்ற, ஐவர் குழு உள்ளது. இக்குழு சொல்வதே, எழுதப்படாத சட்டமாக மாறி வருகிறது. துணைவேந்தர் அலுவலகம், தமிழ்த் துறைக்கு இடையே, மரக்கன்று நட, 100க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. பேராசிரியர்கள், 'கெஸ்ட் ஹவுஸ்' அருகே, மெகா குளம் தோண்டியது உள்ளிட்ட பணிகள், 'ஒர்க் ஆர்டர்' இல்லாமல், துணைவேந்தர் வாய்மொழி உத்தரவால் நடக்கின்றன. முடிவுற்ற பல பணிகளுக்கு கையெழுத்து மட்டும் பதிவாளரிடம் கேட்கப்படுகிறது.
மன உளைச்சல் அதுமட்டுமின்றி, பல்கலை கெஸ்ட் ஹவுசில், வருகை பதிவு இல்லாமல், வி.ஐ.பி.,க்கள், போலீஸ் அதிகாரிகள் தங்கி செல்வதும் நடக்கிறது. பல்வேறு, சிவில் பணிகள் வளாகத்திற்குள் நடக்கின்றன. இதற்கு, பதிவாளர் அனுமதி தர மறுத்து வந்தார்.அதனால், அவருக்கு மனரீதியாக சிலர் அழுத்தம் கொடுத்ததால், மன உளைச்சலில் ராஜினாமா செய்து விட்டார். இதற்கிடையே, துணைவேந்தருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, ஐவர் குழுவில் உள்ள இருவர், 'பொறுப்பு பதிவாளர்' பதவியை பெற, காய் நகர்த்துகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் சுற்றி நடந்தாலும், துணைவேந்தர் கிருஷ்ணன் மவுனம் காத்து வருகிறார். பல்கலை கட்டட பணிகளை கண்காணிக்க, பல்கலை பொறியாளராக, பொதுப்பணித்துறையில் உள்ள, நிர்வாக பொறியாளர் அரசால் நியமிக்கப்பட வேண்டும்.
2012 முதல், இப்பணியிடம் நிரப்பப்படவில்லை.பல சந்தேகங்கள்கிருஷ்ணன் பதவியேற்றதும், அவரது கவனத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டும், அவரும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதில், ஜூனியர் நிலையில் உள்ள, இன்ஜினியர் ஆனந்த்துக்கு, வளாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர், 2015ல், பல்கலையில் நடந்த கெஸ்ட் ஹவுஸ் தீ விபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்; மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்; வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் தொடர்புடையவரிடம், பல்கலைக்கு ஏற்பட்ட இழப்பீடாக, ௭0 லட்சம் ரூபாய் வசூலிக்க, உயர்கல்வி செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.ஆனால், இதுவரை இழப்பீடு வசூல் செய்யப்படவில்லை. இருப்பினும் அவரே, இன்ஜினியராக தொடர்வது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உயர்கல்வி செயலர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கவர்னர் பார்வைக்கும், இப்பிரச்னையை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு, பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment