Monday, May 4, 2020

'வரும் வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்'

Updated : மே 04, 2020 00:52 | Added : மே 03, 2020 23:01

சென்னை: ''கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, வரும் வாரத்தில் அதிகரிக்கும்; பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்,'' என, சென்னை மாநகராட்சி, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணி, நோய் தடுப்பு பணி, போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. முதியோர், சிறுவர்கள், நோயுள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில், 25 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை. முக கவசம் அணியாமல், பொதுமக்கள் சர்வ சாதாரணமாக சுற்றி வருவது, வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் கண்டிப்பாக, முக கவசம் அணிய வேண்டும். சிலர் முக கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு.

பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என, யாராக இருந்தாலும், பேசும் போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வரும் வாரத்தில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்காக, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கோயம்பேடு சந்தையில் உள்ள, அனைத்து தொழிலாளர்களும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை, அதிகப்படுத்த உள்ளோம். அதிக கொரோனா பரிசோதனைகள் நடக்கும் போது, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உணவு, மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை, வீடுகளுக்கு சென்று வழங்குவோர், கடைகளில் பணிபுரிவோர், இனி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள, தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து, 10 நாட்களுக்கு ஒருமுறை, கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 'நமக்கு கொரோனா வராது' என, யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நோய் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு, கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், வைட்டமின் - சி மாத்திரை வழங்கப்படுகிறது.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில், கொரோனா தடுப்பு சவாலாக உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

'750 திருமண மண்டபத்தில் தற்காலிக மருத்துவமனை'

மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:சென்னையில், கொரோனா சிகிச்சை அளிக்க, தற்போது, 4,000 படுக்கை வசதிகள் உள்ளன. ஒரு மாதத்தில், 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, சென்னையில் உள்ள, 750 திருமண மண்டபங்களை கையகப்படுத்தி, தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 5,000 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில், தமிழக அரசு ஒப்புதலோடு, சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024