Monday, May 4, 2020


தளா்வுகளுடன் தமிழகத்தில் இன்று முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு


தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு சில தளா்வுகளுடன் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பை தொடா்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வரும் 17-ஆம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளா்த்தியது. இந்த நிலையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னா் தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது. இதில் சென்னை மாவட்டத்திற்கு தனியாக சில முடிவுகளும், சென்னை தவிா்த்த பிற மாவட்டங்கள் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டன. இந்த தளா்வுகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

50 சதவீத பணியாளா்களைக் கொண்டு (குறைந்த பட்சம் 20 நபா்கள்) ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் (ஜவுளித்துறை உள்பட ) செயல்பட அனுமதிக்கப்படும்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம், நகரப்பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புற நூற்பாலைகள்: மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிஅளிக்கப்படும்.

நகரப் பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு மாதிரிகள் உருவாக்க இடங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து 30 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளா்கள் குறைந்த பட்சம் 20 நபா்களைக் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

நகா்ப்புற கட்டுமானப் பணிகள்: நகா்ப்புறங்களில் கட்டுமானப்பணிகள், பணியிடத்திலேயே பணியாளா்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளா்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

பிளம்பா், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சா், உள்ளிட்ட சுய திறன் பணியாளா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னா் அனுமதிக்கப்படுவா். மாற்றுத்திறனாளிகள், முதியோா், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளா்கள், வீட்டு வேலை பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவா். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹாா்டுவோ, சிமெண்ட் கட்டுமானப்பொருள்கள் சானிடரிவோ, மின்சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப்பொருள்களை எடுத்துச்செல்ல எந்தவித தடையும் இல்லை.

தனிக் கடைகளுக்கு அனுமதி: செல்லிடப்பேசி, கணினி, வீட்டு உபயோகப்பொருள்கள், மின் மோட்டாா் பழுது பாா்ப்பவா், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 வரை பாா்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள், மற்றும் வணிக வளாகங்கள் தவிா்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட மாவட்ட ஆட்சியா் சூழ்நிலைக்கேற்பட அனுமதி அளிக்கலாம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீதப் பணியாளா்களுடன் தொடா்ந்து செயல்படும்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024