வெளிநாடுகளில் மருத்துவம் முடித்தோர்: நிபுணர் குழு கோரிய வழக்கு நிராகரிப்பு
Added : நவ 18, 2020 00:52
சென்னை:வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்கக் கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் 'பிராக்டீஸ்' மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். ஜூன் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஆண்டு தேர்வு ஆகஸ்ட் 31ம் தேதி நடந்தது.
மொத்தம் 300 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 150 பெற வேண்டும். மறு கூட்டல் மறு மதிப்பீடு கிடையாது.சீனா உக்ரைன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட்டில் நடந்த தகுதி தேர்வை எழுதினர்.
இவர்களில் தேர்ச்சி பெறாத 17 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறி இருப்பதாவது:தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 100க்கு மேற்பட்டவை முதுநிலை நுழைவு தேர்வு தரத்தில் இருந்தன; சில கேள்விகள் தவறாகவும் விடைகள் தவறாகவும் இருந்தன. 17 ஆயிரத்து 198 பேர் தேர்வு எழுதியதில் 1999 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எனவே வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய நிபுணர்கள் குழுவை நியமிக்கும்படி மத்திய சுகாதார அமைச்சகம் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். கருணை மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:நிபுணர்களின் வரம்புக்கு உட்பட்ட விஷயங்களில் பொதுவாக நீதிமன்றம் தலையிடாது.மருத்துவத் துறை நிபுணர்களின் வரம்புக்கு உட்பட்டது.தேர்வு முடிந்த பின் கேள்வி மற்றும் விடைத்தாள்களை ஆய்வு செய்ய 20 நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கேள்வித்தாளை ஆய்வு செய்ய நான்கு நாட்கள் இந்தக் குழு செலவிட்டுள்ளது.தவறான கேள்வித்தாள் 'கீ' விடைத்தாள் இடம்பெற்றதாக குழு கண்டறியவில்லை. தொழில்நுட்ப குழுவும் எம்.பி.பி.எஸ். அளவை மீறி கேள்விகள் கேட்டதாக தெரிவிக்கவில்லை.நிபுணர்கள் குழு மீது மனுதாரர்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை.
எனவே ஏற்கனவே 20 நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டு ஆய்வு செய்த பின் மீண்டும் ஒரு குழுவை நியமிக்க முடியாது.அடுத்த தேர்வில் மனுதாரர்கள் நன்கு தயார் செய்து எழுத வேண்டும். மனுதாரர்கள் கோரியநிவாரணத்தை அளிக்க முடியாது.இவ்வழக்கில் தகுதி இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment