Thursday, November 12, 2020

விதிகளை மீறி அரசு சலுகைகளை பெற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

விதிகளை மீறி அரசு சலுகைகளை பெற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

2020-11-12@ 00:06:02

மதுரை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மனுதாரரின் மகன் அரசு மருத்துவராக உள்ளார். இவர் மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளனர்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ராஜா தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக கூறி ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:- நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது குடும்பத்தினர் பெயரிலும் 5 பட்டாக்கள் பெற்றுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். இது குறித்து தாசில்தார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் என்பவர், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் தவறான முன்னுதாரணமாக உள்ளார். எனவே இந்த வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோரை எதிர் மனுதாரராக இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது.

மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதுபோல் எத்தனை பேர் இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ளனர் என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப்பணியில் இருந்து விதிமுறைகளை மீறி அரசின் சலுகைகளை பெற்று இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024