Monday, January 4, 2021

லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

சென்னை  04.01.2021

தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்சம் அதிகம் வாங்கப்படும் அலுவலகங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள், நகர திட்டமிடல் அலுவலகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் என பல துறைகளில் சோதனை நடத்துகின்றனர்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதிமுதல் டிசம்பர் 31-ம் தேதி வரை132 இடங்களில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளில் இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 கிலோ 232 கிராம் தங்கம், 10.52 காரட் வைரம், 9 கிலோ 843 கிராம் வெள்ளி, ரூ.37 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து 33 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, சென்னை சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் இருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம், 3 கிலோ 81 கிராம் தங்க நகைகள், 10.52 காரட் வைரங்கள், 3.343 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 132 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 35 அரசுஅதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட 35 அதிகாரிகள் உட்பட தமிழகம் முழுவதும் லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள் 102 பேரை பணியிடை நீக்கம் செய்யஅரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...