Tuesday, February 9, 2021

மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி


மரத்தில் கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

Added : பிப் 09, 2021 01:14

திண்டிவனம் : திண்டிவனம் அருகே, மரத்தில் கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன், 49. ஐ.டி., கம்பெனி ஊழியர். இவரது மனைவி இந்துமதி, 42; சென்னை சேப்பாக்கத்தில், உள்ள மாநில வேளாண் இயக்குனர் அலுவலகத்தில், வேளாண் அலுவலராக பணியாற்றி வந்தார். மகன் முகிலன், 17; பிளஸ் 1 படித்து வந்தார்.மூவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேற்று காலை, 9:30 மணிக்கு, சென்னைக்கு, 'மாருதி பலீனோ' காரில் புறப்பட்டனர்.

இவர்களுடன், சென்னை ஐ.சி.எப்., பில் பணியாற்றி வந்த செந்தில்நாதனின் அண்ணன் குருநாதன், 54; பயணம் செய்தார். காரை செந்தில்நாதன் ஓட்டினார்.காலை, 11:50 மணி அளவில், திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள வளைவு அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது.காரின் முன் பகுதி நொறுங்கியதில், செந்தில்நாதன், இந்துமதி, குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.முகிலன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆபத்தான வளைவுவிபத்து நடந்த பகுதியில் ஏற்கனவே, மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்தனர். இதனால், அந்த இடத்தில் ஆபத்தான வளைவு என்று எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று அதே இடத்தில் நான்கு பேர் இறந்துள்ளனர்.தாம்பூல பையால் துப்பு துலங்கியதுவிபத்து நடந்த இடத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீசார் உடனே சென்றனர்.

இறந்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. காரில், திருமண நிகழ்ச்சியில் கொடுத்த தாம்பூல பை இருந்தது. அதில் திருமணம் நடந்த இடம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் என்று இருந்தது.உடனே போலீசார், ஒயர்லஸ் மூலம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, திருமணம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர்அதன் பின்னரே, இறந்தவர்கள் பற்றிய முழு விபரம் தெரிந்தது.ஏர் பலுான் இருந்தும் பலனில்லை!விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்த செந்தில்நாதன், டிரைவர் சீட்டிலேயே இறந்து கிடந்தார். அதே நேரத்தில், ஏர் பலுான் ஓப்பனாகி இருந்தது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரியிடம் கேட்ட போது, 'காரை ஓட்டியவர் பிரேக் அடிக்காமல், நேராக மரத்தில் மோதியதால் கார் முற்றிலும் நசுங்கி விட்டது. அதனால் தான், ஏர் பலுான் ஓப்பனாகியும் அவர் இறந்து விட்டார். பிரேக் அடித்ததற்கான தடயம் சாலையில் எதுவும் இல்லை. அனேகமாக துாக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024