Saturday, February 6, 2021

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்


விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிப்பது உள்ளிட்ட 8 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2020 செப்டம்பர் 16-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். புதிய பல்கலைக்கழகம் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ‘டாக்டர்ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்'என்ற புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகியமாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இணைக் கப்படும்.

இவ்வாறு மசோதாவில் கூறப் பட்டுள்ளது. இந்த மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தண்டனை அதிகரிப்பு

அதைத் தொடர்ந்து வரதட்சணை மரணங்களுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப் படும் குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகவும், அதிகபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும் அதிகரிக்க வழி செய்யும் சட்ட மசோதாவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர 2021 அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2021 தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) திருத்தச் சட்ட மசோதா ஆகியவையும் நேற்று நிறைவேற்றப்பட்டன.

மேலும், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு, தேர்தல் நடை பெறாத மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு,கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் முறைகேடுகள், கையாடல்களை விரைந்து வெளிக்கொண்டுவருவதற்கான புலன் விசாரணை காலவரம்பை குறைக்க வழி செய்யும் சட்ட மசோதா என மொத்தம் 8 சட்ட மசோதாக்கள்சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற் றப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024