Added : பிப் 05, 2021 00:26
சென்னை:'சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு இணையான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடலுார் மாவட்டம், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி, அதை சார்ந்த கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என, 2020 - 21ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. கல்லுாரிகள் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதனால், இக்கல்லுாரிகளில் மாணவர் கல்வி கட்டணம், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ளது போல மாற்றியமைக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 13 ஆயிரத்து, 610 ரூபாய்; பி.டி.எஸ்., படிப்பிற்கு, 11 ஆயிரத்து, 610 ரூபாய்; பட்ட மேற்படிப்புக்கு, 30 ஆயிரம் ரூபாய்; டிப்ளமா படிப்பிற்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு, 5,000 ரூபாய் கட்டணம். இக்கட்டணம், தற்போது படிக்கும் மாணவர்களுக்கும், வருங்காலங்களில் பயில உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும். கல்வி கட்டணத்தை மாற்ற வேண்டும் என்ற, மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டு உள்ளது.
எனவே, மாணவர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட்டு, கல்லுாரிக்கு திரும்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment