Saturday, September 4, 2021

பயிற்சி டாக்டர் பணி இயக்குனருக்கு உத்தரவு


பயிற்சி டாக்டர் பணி இயக்குனருக்கு உத்தரவு

Added : செப் 04, 2021 00:22

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்களுக்கு, கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை, மருத்துவ கல்வி இயக்குனர் கண்காணிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்க பொதுச்செயலர் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவில், 'அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மேல்படிப்பு மாணவர்களை, எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கின்றனர்.'பணிச் சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

எட்டு மணி நேர பணி நிர்ணயித்து, 2015ல் பிறப்பித்த அறவிப்பை அமல்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார்.

அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''கூடுதல் பணி என எந்த புகாரும் இல்லை. புகார் அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மேற்படிப்பு மாணவர்களுக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்படுகிறதா என்பதை, மருத்துவ கல்வி இயக்குனர் கண்காணிக்கும்படி உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024