Monday, September 27, 2021

பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்



பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும்



27.09.2021  THE HINDU TAMIL 

சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் சில காலங்கள் பழகியதாகவும், அதற்குப் பிறகு அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததாகவும், அதனால் கோபமடைந்த இளைஞன் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகளில் தெரியவந்தது. சமீப காலங்களில் நாம் தொடர்ச்சியாக இது போன்ற செய்திகளைக் கவனித்துவருகிறோம். ஒரு பெண் தன்னை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவது பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு பெண் தனக்குக் கட்டுப்பட வேண்டும், அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருக்கக் கூடாது, தன்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும், தன்னைத் தாண்டி அவளுக்கு வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கக் கூடாது என்ற மூர்க்கத்தனமான பழமைவாத ஆண்மையச் சிந்தனையின் நீட்சியே ஒருவனை இப்படிப்பட்ட மனநிலையை நோக்கித் தள்ளுகிறது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைப் பின்தொடர்வதோ அல்லது தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்துவதோ ஒரு கதாநாயக பிம்பமாகத் திரைப்படங்களில் வலிந்து திணிக்கப்படுகிறது. இந்தத் திரை நாயகர்களைத் தங்களின் ஆதர்சமாக எடுத்துக்கொள்ளும் இந்த இளைஞர்கள், இந்தச் செயலைக் கொஞ்சம்கூடக் குற்றவுணர்வின்றிச் செய்யத் தொடங்குகிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை நிராகரிக்கிறாள் என்றால், அதற்கு ஆண்களிடம் பல காரணங்கள் இருக்கின்றன, அப்படி எதுவும் இல்லையென்றாலும் அவனை நிராகரிப்பதற்கான முழு உரிமை அந்தப் பெண்ணுக்கு உண்டு; அது எந்த வகையிலும் அந்தப் பெண்ணின் தவறல்ல என்பதை ஆண் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தச் சமூகம் அவனுக்குள் அந்த உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொதுவாகவே, ஒரு குடும்ப அமைப்புக்கே குழந்தைகளுக்கு அறநெறிகளை ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சக மனிதர்களை மதிப்பது முதல் சமூகத்தின் மீதான நன்மதிப்புகளை உருவாக்கிக்கொள்வது வரை ஒருவர் அவரது குடும்பத்திலிருந்தே அத்தனையையும் பெற வேண்டும். ஆனால், அதைச் சொல்லிக்கொடுக்கும் இடத்தில் நமது குடும்ப அமைப்புகள் இருக்கின்றனவா? சாதி முதல் அத்தனை பாகுபாடுகளையும் அதன் இறுக்கம் குறையாமல் பாதுகாக்கும் அமைப்பாகவே பெரும்பாலான குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. ஆண்-பெண் பாகுபாடுகளையும் குடும்ப அமைப்புகள் சமரசமின்றிப் பாதுகாக்கின்றன. ஒரு ஆணுக்கு இலகுவானதாக இருக்கும் நமது குடும்ப அமைப்பு, பெண் என்றால் வலிந்து கட்டுப்பாடுகளை உருவாக்கிக்கொள்கிறது. சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தையை வளர்ப்பதிலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதிலும் பல பாகுபாடுகளைக் கொண்டுள்ளதாக நமது குடும்பங்கள் இருக்கின்றன. இதைப் பார்த்து வளரும் ஆண் சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் தனக்குக் கீழானவள் என்ற எண்ணத்துடனே வளர்கிறான். அதனால், ஒரு பெண் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அவனுக்குத் தவறானதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் அது கொண்டாடவும் படுகிறது “ஒரு பொண்ணு உனக்கே இவ்வளவு இருந்தா... ஆம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்” என்ற வீர வசனங்களை சினிமாவிலிருந்து மட்டுமல்ல, தனது சொந்த வீட்டிலிருந்துமே ஒருவன் பெறுகிறான்.

அறநெறிகளைப் பற்றியோ சக மனிதர்களின் மீதான மாண்பைப் பற்றியோ துளியும் கவலையில்லாமல் ஒருவன் வளரும்போது அதைக் குடும்பமும் சமூகமும் ஆரம்பத்திலேயே கவனித்து, அவனது நடவடிக்கைகளைச் சீர்ப்படுத்த வேண்டும். ஒரு குற்றச் செயலில் அவன் ஈடுபடும்போது அதைத் தவறென்று சுட்டிக்காட்ட வேண்டும், வன்முறையோ வெறுப்போ எத்தனை ஆபத்தானது என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்க்க வேண்டும். நமது கல்வி முறையின் முதன்மை நோக்கமாக மாணவர்களை இப்படிப் பண்படுத்துவதும் அவர்களுக்குள் அறநெறிகளை வளர்ப்பதுமாக இருக்க வேண்டும். ஆனால், மதிப்பெண்களைப் பிரதானமாகக் கருதும் கல்வி முறையில் அறநெறிகள் பின்தள்ளப்பட்டு வெகுகாலமாகின்றன. நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவர் தனிப்பட்ட வாழ்வில் எந்த அறநெறிகளும் இல்லாமலும் இருக்கலாம்; அதைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.


ஆண்-பெண் பாகுபாடில்லாமல் குழந்தைகளை வளர்ப்பது, பெண்களைக் குடும்பத்தில் சமமாக நடத்துவது, அவர்களின் முடிவுகளை மதிப்பது, அவர்களின் சுதந்திரத்தை அனுமதிப்பது, ஆண் மையச் சொல்லாடல்களைக் கவனமாகத் தவிர்ப்பது போன்றவற்றையெல்லாம் குடும்ப அமைப்பு கடைப்பிடிக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டுமில்லாமல், தங்களது நடவடிக்கைகளிலேயே குடும்ப உறுப்பினர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். அதைப் பார்த்து வளரும் ஒரு சிறுவன் இயல்பாகவே பெண்களை மதிக்கக்கூடியவனாகவும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவனாகவும் வளர்வான். ஒரு பெண்ணோடு பழகும்போதும் அல்லது பிரியும்போதும் முழுமையாக அவளின் நிலையை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை, அவளின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிதானத்தை இப்படி வளரும் ஆண்களே கொண்டிருப்பார்கள்.

சமூக வலைதளங்களின் வரவுக்குப் பிறகு, நவீன கால இளைஞர்களுக்கிடையே ஆழமான உறவு என்பதே குறைந்திருக்கிறதாக நினைக்கிறேன். ஒரு உறவின் மீதான பிணைப்பைவிடத் தனிப்பட்ட சுயநலன்களைப் பெரிதாகக் கொண்ட தலைமுறை உருவாகிவருகிறது. ஆண்-பெண் இருவருக்கிடையேயான உறவில் பரஸ்பர அன்பைவிட, பரஸ்பர அங்கீகாரங்களைவிட சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது பிரதானமாக இருப்பதை இந்தக் காலத்து இளைய தலைமுறையினரிடம் உணர்கிறேன். இந்த சுய பிம்பம் கேள்வி கேட்கப்படும்போதோ அல்லது நிராகரிக்கப்படும்போதோ அது அவர்களைப் பதற்றப்படுத்துகிறது; அதன் வழியாக அவர்கள் நிதானம் இழக்கிறார்கள்.

இளைஞர்களிடம் சமீப காலங்களில் அதிகரித்துவரும் பரஸ்பர வெறுப்பும், வன்முறைப் போக்குகளுமேகூட இப்படிப்பட்ட சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான புரிதல் இல்லாமல் மேலோட்டமாக இருப்பது, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் அரசியல் தெளிவற்றவர்களாகவும் இருப்பது, சமூக வலைதளங்களின் அங்கீகாரத்துக்காக நிஜ உலகில் யாருடனும் பிணைப்பில்லாமல் தனிமையில் உழல்வது, இதனால் தன்னிச்சையாக எழும் தாழ்வுமனப்பான்மையும், சக மனிதர்களின் மீதான பொறாமையையும் எப்போதும் மனதில் கொண்டிருப்பது போன்றவையெல்லாம் பெருவாரியான இன்றைய இளைஞர்களிடம் காண முடிகிறது. இவற்றின் காரணமாக ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் மனநிலையை அவர்கள் மிக சுலபமாகப் பெற்றுவிடுகிறார்கள் அது சார்ந்த குற்றவுணர்ச்சியும், சமூகப் பொறுப்பும் இல்லாத நிலையில் அவர்கள் அந்தக் குற்றத்தையும் கண நேரத்தில் செய்துவிடுகிறார்கள்.

ஒரு முதிர்ச்சியான சமூகமாக இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதில் நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பங்கு இருக்கிறது. நம் இளைஞர்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதில், இது போன்ற வன்முறைச் சம்பவங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதில், மனித நேயத்துடன், மனிதர்களின் மீதான மாண்பு குறையாமல் அவர்களை வளர்ப்பதில் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதைத் திறந்த மனதுடன் அணுகாமல், நாம் இதற்கான தீர்வை எப்போதும் அடைய முடியாது.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர்.தொடர்புக்கு: sivabalanela@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024