Friday, September 24, 2021

இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

இது உங்கள் இடம்: 'பென்ஷன்' என்பது பிச்சை அல்ல; மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

Updated : செப் 24, 2021 03:27 | Added : செப் 24, 2021 03:26 

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி செல்வந்தராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எதுக்கு ஓய்வூதியம்?' என இப்பகுதியில், மதுரையிலிருந்து டாக்டர் எம்.செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பென்ஷன் விவகாரம் குறித்து சில உண்மைகளை தெளிவாக்க விரும்புகிறேன்...

நான், மத்திய அரசு பணியில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 60 வயதில் பணி நிறைவு பெற்று, 10 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு துறையில் எந்த பணியில் இருந்தாலும், டாக்டர் சொல்வது போல லஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு; ஆனால், மத்திய அரசு பணி அப்படிப்பட்டது அல்ல. கேட்டாலும் 1 ரூபாய் கூட லஞ்சம் கிடைக்காத துறைகளும் உண்டு. கேட்காமலே, பையில் திணித்து விட்டுப் போகும் துறைகளும் உண்டு. நான், லஞ்சம் வாங்கியதே கிடையாது. இந்நாட்டில் எனக்கென சொந்தமாக வீடோ, 1 அடி நிலமோ கிடையாது. இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்.

நான் பணி நிறைவு பெறும் போது, என் கடைசி மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் தான். டாக்டர் குறிப்பிட்டிருப்பது போல, லட்ச ரூபாய் அல்ல. கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக வழங்கப்படும். அதாவது, 15 ஆயிரம் ரூபாய். அதில் மூன்றில் ஒரு பங்கு, 5,000 ரூபாயை, 'கம்யூட்டேஷன்' செய்ததில் மீதி 10 ஆயிரம் ரூபாய் தான் நிகர பென்ஷன். அகவிலைப்படி உள்ளிட்ட சமாச்சாரங்களால், தற்போது என் மாதாந்திர பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாய். எங்கள் மகன் தனிக்குடித்தனம் சென்றதால் நானும், என் மனைவியும் பென்ஷன் தொகை 20 ஆயிரம் ரூபாயில் தான், வாடகை கொடுத்து, சாப்பாட்டு, மருத்துவ செலவை பார்த்து கொள்கிறோம்.

அந்த வாசகரின் கருத்துப்படி, பென்ஷன் இல்லையென்றால் நானும், என் மனைவியும் சோற்றுக்கு பிச்சை தான் எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களில் நேர்மையாக பணியாற்றியோரும் இருப்பர். அவர்களையும் மனதில் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் தேவை தானா என்ற கேள்வி, தமிழக அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்; சேவைத் துறையில் பணியாற்றி பென்ஷனில் உயிர் வாழும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது. பென்ஷன் என்பது பிச்சை அல்ல. ஆண்டுக்கணக்காக அரசு பணியில் இருந்து, பணி நிறைவு பெற்று இளைப்பாறிக் கொண்டிருக்கும் மூத்த குடிமகன்களின் உரிமைத் தொகை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024