Thursday, September 23, 2021

அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை: 'நீட்' தேர்வின் பலன்கள் குறித்து பாலகுருசாமி விளக்கம்


அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை: 'நீட்' தேர்வின் பலன்கள் குறித்து பாலகுருசாமி விளக்கம்

Added : செப் 23, 2021 00:20

சென்னை:'அதிகாரத்தில் உள்ளோரின் விருப்பத்துக்கு ஏற்ப, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் கமிட்டி, நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது' என, கல்வியாளர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் கமிட்டியின் அறிக்கை, சமீபத்தில் வெளியானது. அதன் அம்சங்கள் குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை, ஏற்ற இறக்கமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் உருவான, பாரபட்சமான அறிக்கையாக தெரிகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்துக்கும், அவர்களின் எண்ணங்களுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக, முதலில் பரிந்துரைகளை எழுதி விட்டு, அதற்கு ஆதரவாக அறிக்கையை உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது. அறிக்கையில் பல்வேறு ஆச்சர்யத்தக்க விஷயங்கள் உள்ளன.அதாவது, 'மாநிலங்கள் நடத்தும் கல்லுாரிகளுக்கு, மத்திய அரசால், நுழைவு தேர்வை நடத்த முடியாது. பல்கலைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.'நிகர்நிலை பல்கலைகளை கட்டுப்பாட்டில் எடுக்க மாநில அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும்' என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலன்கள் புரியவில்லை

'நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், தமிழக சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகம் சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு செல்லலாம்' என, நகைப்புக்குரிய கருத்தும் கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது நீட் தேர்வின் முக்கியத்துவம், அதனால் மாணவர்களுக்கும், பொதுமக்களும் கிடைக்கும் பலன்கள் குறித்து புரிந்து கொள்ளவில்லை என, இதில் இருந்தே தெரிகிறது.

நீட் தேர்வால் ஏற்படும் பலன்களை, ராஜன் கமிட்டி எடுத்துக்காட்ட தவறிவிட்டது. மேலும், ராஜன் கமிட்டி அறிக்கையில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பல்வேறு பாட திட்டத்தில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்ப்பது எப்படி பொதுவானதாக இருக்கும்.

பல பாட திட்ட மாணவர்களுக்கு பொதுவான தேர்வு நடத்துவதே சரியானது.முற்றுப்புள்ளி நீட் தேர்வு வரும் முன், பல்வேறு மாநிலங்களும், மத்திய கல்வி நிறுவனங்களும், நிகர்நிலை பல்கலைகளும் தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தின. நீட் தேர்வு வந்த பின், எல்லாம் ரத்து செய்யப்பட்டு, ஒரே தேர்வாக மாறியுள்ளது.

நீட் தேர்வின் மதிப்பெண்ணை கொண்டு, எல்லா மருத்துவ கல்லுாரிகளுக்கும் மாணவர் சேர்க்கை பெற முடிகிறது. இதன் காரணமாக, பல்வேறு நிறுவன நுழைவு தேர்வுக்காக தனித் தனியே பயிற்சி எடுப்பது, கட்டணம் செலுத்துவது, நேரத்தை செலவிடுவதும் குறைந்து உள்ளதோடு, மாணவர்களுக்கான அழுத்தமும், கவலையும் குறைந்துள்ளது. நியாயமான, வெளிப்படையான அணுகுமுறையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டை தவிர மற்ற இடங்கள் அனைத்தும், தமிழக மாணவர்களுக்கே கிடைக்கிறது. நீட் மதிப்பெண்ணை பயன்படுத்தி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மாநில கல்வி நிறுவனங்களிலும் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது. வெளிநாட்டு மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் சேர முடிகிறது.

ஊழல் ஒழிந்தது

சில தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களிடம் மறைமுகமாக நன்கொடை வசூலித்து, மருத்துவ சேர்க்கை வழங்கும் நடைமுறை இருந்தது. இதற்கு நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஊழல் ஒழிக்கப் பட்டு உள்ளது. நீட் தேர்வின் வழியே, இந்திய மருத்துவ படிப்புக்கு, சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில், 27 சதவீதம் மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும்; 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ஏராளமான ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பலன் அடைவர். எனவே, ஒரு சார்பான அறிக்கையின்படி, தமிழக அரசு நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றியிருப்பது துரதிர்ஷ்ட வசமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024