கோவில் இடத்திற்கு வாடகை பாக்கி டாக்டரை வெளியேற்ற உத்தரவு
Added : நவ 13, 2021 21:59
சென்னை:ஏழு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் வாடகை பாக்கி வைத்தவரை, கோவில் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோவில் உள்ளது. இதற்கு சொந்தமான இடத்தில், டாக்டர் தியாகராஜன் என்பவர் கிளினிக் நடத்துகிறார்.
அமல்படுத்தவில்லை
வாடகை செலுத்த தவறியதால், குத்தகையை ரத்து செய்து வெளியேற்ற, 2013ல் நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்தார். வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தாலும், அதை அமல்படுத்த வில்லை.இதற்கிடையில், வாடகை பாக்கி மற்றும் உயர்த்தப்பட்ட வாடகை என 3.56 லட்சம் ரூபாயை, கோவில் நிர்வாகத்திடம் டாக்டர் தியாகராஜன் செலுத்தினார்.
மனு தாக்கல்
அதேநேரத்தில், குத்தகை இடத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை, 2021 செப்டம்பரில் கோவில் நிர்வாகம் எடுத்தது. அதற்காக போலீஸ் பாதுகாப்பும் கோரியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் டாக்டர் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தன்னிச்சையாக வாடகையை உயர்த்தி, 2019 டிசம்பரில் நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டது. தற்போது இடத்தில் இருந்து வெளியேற்ற, போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். 'எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல், வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது' என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2014 நவம்பரில் இருந்து ஏழு ஆண்டுகளாக, ஒரு ரூபாய் கூட வாடகை பாக்கி செலுத்தாமல், டாக்டர் தியாகராஜன் அனுபவித்து வந்துஉள்ளார். ஒரு மாதம் வாடகை பாக்கி என்றாலும், சொத்தின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்தால், குத்தகையை ரத்து செய்ய கோவில் நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது.
அதிகாரம்
ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, வலுக்கட்டாயமாக வெளியேற்ற கோவில் அதிகாரிகளுக்கு, சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.எனவே, ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி அகற்றிக் கொள்ளலாம். அதில், குறுக்கிட தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுவரை மனுதாரர் வெளியேற்றப்படவில்லை என்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடகை பாக்கியையும், சட்டப்படி வசூலித்து கொள்ளலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment