மெல்ல மேலே எழும்புகிறது...விமான பயணிகள் எண்ணிக்கை! வானமே எல்லை!
Updated : நவ 08, 2021 01:56 | Added : நவ 07, 2021 23:15
கோவை சர்வதேச விமானநிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது; தினமும் சராசரியாக, 5 ஆயிரம் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது.
கோவை சர்வதேச விமானநிலையத்தின் விரிவாக்க பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் கோவையில் இருந்து வெறும், 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் நடப்பு மாதம் விமானங்களின் எண்ணிக்கை, 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதம் முதல் உள்நாட்டு பிரிவில், புதிய நகரங்களுக்கு விமான சேவை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் கையாளப்பட வாய்ப்புள்ளதாக, விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:கோவை சர்வதேச விமானநிலையம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 'பிசி'யாக துவங்கியுள்ளது. கோவையில் இருந்து நடப்பு மாதம் டில்லி மற்றும் கோல்கட்டாவுக்கு புதிய நேரடி விமான சேவைகள் துவங்கியுள்ளன.இதன்மூலம் உள்நாட்டு பிரிவில் 20க்கும் மேற்பட்ட விமானங்களும், வெளிநாட்டு பிரிவில் சார்ஜாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.
உள்நாட்டு பிரிவில் சென்னைக்கு, 7 விமானங்கள், மும்பை, 4, பெங்களூரு, 3, ஐதராபாத், 3, டில்லி, 2, கோல்கட்டாவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து தினமும் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்படும் விமான சேவைகளில், 7,200 சீட்கள் உள்ளன. இவற்றில் தற்போது உள்நாட்டு பிரிவில் சராசரியாக, 5 ஆயிரம் சீட்கள் 'புக்' செய்யப்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனம் இயக்கும் ஏ320 ஏர்பஸ் விமானத்தில், 180 பயணிகள் வரை செல்லலாம். கோவை சர்வதேச விமானநிலையம் 2019ம் ஆண்டு மொத்தம், 30 லட்சம் பயணிகளை கையாண்டது. சராசரியாக மாதம், 2.5 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு விமான பயணிகளின் எண்ணிக்கை திரும்பி வருகிறது. இதே ரீதியில் தொடர்ந்தால் வரும் டிச., மாதம் சராசரியாக, 2 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
சரக்கு ஏற்றுமதி கிராப் 'விர்ர்...'
கோவை விமான நிலையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதம் 70 டன் சரக்கு ஏற்றுமதியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை 98 ஆயிரமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இது ஒரு லட்சத்து 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து 58 ஆயிரம் பேரும், திருச்சியிலிருந்து 12 ஆயிரம் பேரும், துாத்துக்குடியிலிருந்து 13 ஆயிரம் பேரும் விமானத்தில் பயணித்துள்ளனர். சேலத்திலிருந்து 51 பயணிகள் மட்டுமே சென்று வந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் சர்வதேச அளவில் 70 டன் ஏற்றுமதியையும், உள்நாட்டில் 690 டன் சரக்குகளையும், செப்டம்பர் மாதத்தில் கோவை விமான நிலையம் கையாண்டுள்ளது.-நமது நிருபர் குழு-
No comments:
Post a Comment