தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய பொதுமக்களால் பேருந்துகளில் கூட்டம்
தீபாவளி தொடர் விடுமுறை முடிந்த நிலையில், பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. படம்: எஸ்.குரு பிரசாத்
தீபாவளி தொடர் விடுமுறைக்குப் பின்னர் பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினர். இதனால், நேற்று சேலம், கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெளியூர்களில் பணிபுரிவோர், கல்லூரி மாணவ, மாணவிகள் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்த பின்னர் நேற்று தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதலே பயணிகள் வருகை படிப்படியாக அதிகரித்தது. இதனால், பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தடுக்க நுழைவு வாயில்கள், நடைமேடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து நிலையத்துக்குள் கார், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவை வராமல் தடுத்தனர்.
சுங்கச்சாவடியில் காத்திருப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து நேற்றுகிருஷ்ணகிரி வழியாகவே தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினர். இதனால், கிருஷ்ணகிரி பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பலர் கூட்ட நெரிசலில் பயணம் செய்ததோடு, பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும் சென்றனர். குறிப்பாக ஓசூர், பெங்களூருக்கு பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால் பயணிகள் வெகுநேரம் காத்திருந்தனர்.
இதை அறிந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எந்த ஊர்களுக்கு அதிக பயணிகள் கூட்டம் இருந்ததோ அந்த ஊர்களுக்கு மாற்றுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல, கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சுங்கச்சாவடியை கடந்த செல்ல நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment