
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025
மதுரை: பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படும் இடமாறுதல்களை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.சிவகுமார். இவர் 1995 முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கான ஊதியம் தரப்படுவதில்லை. ணிக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில் சிவகுமாருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், அவருக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார். மனு நிலுவையில் இருந்தபோது சிவகுமார் வணிகப் பிரிவிலிருந்து, நீதிமன்றப் பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதற்கு உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.
இந்நிலையில், சிவகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி பட்டு தேவனாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக் கழகம் தரப்பி்ல், மனுதாரர் பணியிட மாற்றம் நிர்வாகத் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டது. அவமதிப்பு மனு தாக்கல் செய்ததால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது சரியல்ல. பணியாளர் எப்போது வேண்டுமானாலும் இடமாறுதல் செய்யப்படுவார் என பணி நியமன உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜரான அதே நாளில், மனுதாரர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், மனுதாரர் மருத்துவ விடுப்பில் இருந்த நேரத்தில், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மனுதாரரின் இடமாறுதல், தீய எண்ணத்துடன் நடந்துள்ளது.
மனுதாரர் பழிவாங்கும் எண்ணத்தில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக இடமாறுதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது. அதே நேரத்தில், அந்த இடமாறுதல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், நீதிமன்றம் தலையிடாமல் இருக்காது. இவ்வாறு நடக்கும்போது நீதிமன்றம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்காது. மனுதாரரின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment