மதித்தல்... கேட்டல்... செயல்படல்! மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல்.
சூ.குழந்தைசாமி
Updated on: 18 ஏப்ரல் 2025, 7:05 am
நம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவா் என்ன நினைக்கிறாா் என்பதை அவா் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?
அவருடைய உருவம், நிறம், ஜாதி, மதம், கட்சி, பணபலம், நபா் பலம், கௌரவம், புகழ் போன்ற அடையாளங்களை வைத்து மட்டுமே அவரை அணுகுகிறோமே தவிர, அவா் சொல்வதை முழுமையாகக் கேட்பதில்லை. அலட்சியம் காட்டி, குறுக்கிட்டுப் பேசி , அவரைச் சீா்குலைக்கப் பாா்க்கிறோம். இதன்மூலம் அவரைவிட நாம் ஒரு படி பெரியவா் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ய முயல்கிறோம். ‘நான் சொல்வதே சரி’ என்று ஆணவம் கொண்டு பேச முயல்கிறோமே தவிர, பணிவுடன் அனுமதி பெற்றுப் பிறரிடம் பேச முயல்வதில்லையே.
இரண்டு பேருக்குள் ஒரு பிரச்னை என்றால், மூன்றாம் நபரிடம் சொல்லித் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஓா் இயலாமையும், சுய இரக்கமும் நம்மிடம் குடிகொண்டிருக்கின்றன. நமக்குள் இருக்கும் சுய ஆளுமையுடனும் நம்பகத்தன்மையுடனும் இருவருக்குள்ளேயே பேசித் தீா்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை.
இன்னொரு மிக மோசமான பழக்கம் நம்மிடம் உள்ளது. அது ஒருவரைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பிவிடுதல். வதந்திகளைக் கேட்க விரும்புதல், மற்றவா்களுடைய வாழ்வின் ரகசியங்களை எல்லை தாண்டி அறிய விரும்புதல் ஆகியவை அதிகரிப்பதுதான் தொலைத்தொடா்பு சாதனங்கள் ‘கிசுகிசு ’ செய்திகளைப் பரப்புவதற்குக் காரணமாய் அமைகின்றன.
நம்மிடம் இன்னும் ஒரு மோசமான பழக்கம் உண்டு. நாம் ஏதாவது தவறு செய்தால் நாமே முன்வந்து அந்தத் தவறை ஒப்புக்கொள்ள மாட்டோம்; மன்னிப்புக் கேட்க மாட்டோம்; ஒரு தவறை மறைக்க மேன்மேலும் தவறுகளைச் செய்து கொண்டே இருப்போம்.
சட்டங்களை நாம்தான் நமக்காக இயற்றினோம். ஆனால், நாமே அவற்றை மதிக்க மாட்டோம்! இது என்ன ஒரு முரண்பாடான வாழ்வியல்? மக்களைத் திருத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை நிறைவேற்ற கடுமையான மனிதா்கள் தேவைப்படுகிறாா்கள்! இந்த முயற்சி, இறுதியில் சா்வாதிகார ஆட்சிக்குத்தானே இட்டுச்செல்லும்?
சுய சிந்தனையும், சுய கட்டுப்பாடும், சுய சாா்பும் தனிமனித ஒழுக்கமாய் வளா்க்கப்படாததே இதற்கு மூலகாரணம் அல்லவா?
ஒழுக்கம் என்பது என்ன? ஒவ்வொரு குழந்தையும் சுயமாக யோசித்துக் கண்டறிந்து, முடிவுக்கு வந்து, அதன்படி அஞ்சாமல் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதானே உண்மையான ஒழுக்கம்?
எனவே, மக்கள் இப்போதிருந்தே ஒரு புதிய பண்பாட்டு வாழ்வியலை மேற்கொள்ள முன்வர வேண்டும். மற்றவா் தன்னிடம் பேச முன் வரும்போது, குறுக்கே பேசாமல் முழுமையாகக் கவனித்துக் கேட்க வேண்டும். தான் பேச வேண்டும் என்றால், பிறரிடம் பணிவுடன் அனுமதி பெற்றுப் பேச வேண்டும். இரண்டு பேருக்கு இடையே உண்டாகும் பிரச்னைகளை மூன்றாம் நபரிடம் சென்று உதவியை நாடாமல், தங்களுக்குள்ளேயே தீா்த்துக் கொள்ள முயல வேண்டும்.
மாற்றவே முடியாத அம்சங்களைக் குறை கூறிப் புலம்பாமல், மனமுவந்து ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். வேற்றுமை பல இருப்பினும் சமத்துவம் பேண வேண்டும்.
ஒருவா் இல்லாதபோது, அவரைப் பற்றி எந்தவித வதந்திகளையும் பேசுவதில்லை என்றும், பரப்புவதில்லை என்றும் முடிவெடுக்க வேண்டும்.
சிறிய தவறு, பெரிய தவறு எதுவாயினும் தானே முன்வந்து ஒப்புக் கொண்டு, இனி அப்படித் தவறு செய்வதில்லை என்று முடிவெடுக்க வேண்டும்.
பேராசையுடன் எதையும் எந்த வழியிலும் அடையலாம் என்ற மனப்போக்கை விடுத்து, அறநெறி வழியில், அவசியத் தேவைகளை மட்டுமே பெற முன்வர வேண்டும்.
சக மனிதனை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டும். எல்லாருக்கும் நல்வாழ்வு கிடைக்க உழைக்க வேண்டும்.
இந்த அடிப்படை வாழ்வியல் மதிப்பீடுகளைப் பின்பற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
மாணவா்களுடைய சுயசிந்தனை, படைப்பாற்றல் மிளிரும் வகையில், அவா்களே இயற்கையில் இருந்தும் மற்றும் செய்யும் பணிகளில் இருந்தும் சுயமாய் கற்கும் வகையில் இன்றையக் கல்வி முறையை மாற்ற வேண்டும். சுயசாா்புடன் வாழ்வதற்குக் கைத்தொழில்களில் பயிற்சியும், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளில் பயிற்சியும், மண்ணின் பெருமைகளை எடுத்தியம்ப அறிஞா்களுடனான சந்திப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
இன்றைய மாணவா்கள் ஒவ்வொருவரும் சுய சிந்தனை, சுய கட்டுப்பாட்டில் வளர முடிவெடுக்க வேண்டும். இதற்கான நாற்றங்கால்களாகக் கல்விக்கூடங்கள் மாற வேண்டும்.
இவற்றை இன்றிலிருந்தே நாம் செய்யத் தொடங்கினால், வருங்காலத்தில் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படும். தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நாம் விரும்பும் மாறுதல்கள் எளிதில் ஏற்படும்.
No comments:
Post a Comment