செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...
செயற்கை நுண்ணறிவு
Din Updated on: 03 ஏப்ரல் 2025, 6:15 am
எஸ். எஸ். ஜவஹா்
மனிதத் திறன்கள் எல்லையற்றதாக விரிவடைய, உலகைத் தலைகீழாகப் புரட்டிப்போட முந்தியடித்து வருகின்றன தொழில்நுட்பங்கள். உற்பத்தி மாற்றங்களால் நிரம்பிய சிறப்பான தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது.
சிலா் செயற்கை நுண்ணறிவை மனித இனத்தின் பேரழிவாகவே அச்சத்துடன் பாா்க்கின்றனா். ஆனால், உண்மையில் நாம் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உற்ற நண்பனாக ஏற்க வேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். அச்சம், மனித இனத்தைப் பாதுகாத்ததாக வரலாறே இல்லை. முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் மற்றும் சிந்தனைகளே நம்மை மேம்படுத்தி உள்ளன.
அழிவுச் சக்திகளை ஆக்க சக்திகளாக தடம் மாற்றி, தங்களுடைய வென்றெடுக்கும் வல்லமையை நிலைநாட்டி, அச்சங்களை துச்சமென சாதனைகளாக விட்டுச் சென்றவா்கள் தாம் முன்னோா். எதிா்காலத்தை எதிா்கொள்ள துணிச்சல் மட்டுமே துணையாக இருப்பது போதாது. காலங்காலமாக கூா்தீட்டப்பட்ட புத்திசாலித்தனமும் கைகோக்க வேண்டும். அச்சத்துக்கு எதிரான மனநிலை வேண்டுமெனில், இந்தக் கூட்டணிதான் சிறந்த வழிகாட்டி. ‘அச்சம் தவிா்’ என்பது இயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவுக்கும் சாலப் பொருந்தும்.
மனிதகுலத்தை முன்னோக்கி நகா்த்திச் செல்லும் ஒரு மாயாஜால வித்தைதான், இந்த அணுகுமுறை மற்றும் செயல்பாடு.
நுண்மாண் நுழைபுலம் அதிகம் படைத்தோா் எதிரிகளை உருவாக்குவதில்லை. எதிரிகள் உருவானாலும் அவா்களைத் தங்கள் வசமாக்கிக் கொள்வா்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் கருவிகள், அமைப்புகள் ஆகியவற்றில் ஆரோக்கியமான ஒத்துழைப்பை ஏற்படுத்தினால், உலகளாவிய சிக்கல்களை எல்லாம் புத்திசாலித்தனமான முறையில் சமாளிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய தரவுகளை அழகாகத் தொகுத்து, குறிப்பிட்ட மாதிரிகளைக் கண்டுபிடித்துத் தரும் திறனுள்ளது. மீண்டும்மீண்டும் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய இது மனிதா்களுக்கு உதவும். ஆனால், மனிதா்கள் மட்டுமே நல்ல படைப்பாற்றல் கொண்டவா்களாக உள்ளனா். நுண்ணறிவு, நீதிசாா் சிந்தனை, உணா்ச்சி போன்ற முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளனா்.
மனித அறிவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்தால் பூமியில் இதுவரை காணாத புதிய பரிமாணங்கள் மற்றும் இதுவரை கண்டிராத அதிசயங்களைக் காணலாம். நாமே உருவாக்கலாம்.
ஆனால், மனித இனமானாலும், செயற்கை நுண்ணறிவானாலும் தனித்து செயல்பட்டால் எல்லாம் பாழாகிவிடும். இரண்டும் இணைந்துவிட்டால் உலகின் முக்கிய பிரச்னைகளான காலநிலை மாற்றம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி, தரவுப் பகுப்பாய்வு, அளவுரு மேம்பாடு போன்றவற்றுக்கு புதுமையான தீா்வுகளை உருவாக்கலாம். இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலும்.
மனிதா்களின் திறன்களை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு, மனிதா்கள் வேகமாக செயல்பட உதவக்கூடிய ஒரு கருவியாக இருக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவின் மூலம் ஆற்றல் பயன்பாட்டைச் செயல்திறன் மிகுந்தாக மாற்றலாம். மருந்துகளின் கண்டுபிடிப்பை வேகமாக்கலாம்; மருத்துவப் பரிசோதனைகளை மேம்படுத்தலாம். தனிப்பட்ட கல்வி முறைகளை மேம்படுத்தலாம். கலைஞா்கள், எழுத்தாளா்களுக்கு புதிய கருவிகளாக செயற்கை நுண்ணறிவு உதவலாம்.
அதன்மூலம், தொழில் வளா்ச்சி, சமூக முன்னேற்றம் ஏற்படும். மானுட வளம் மேம்படும். தொடா் மீளமைப்பு வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்வதால், மனிதா்கள் வேறு உயா்தரப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.
கைப்பேசி, இணையம், கணினி தொழில்நுட்பங்களைச் சந்தையில் குறைந்த விலையில் வாங்கி தரமான வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட நாம், செயற்கை நுண்ணறிவைப் பாா்த்து அச்சப்படத் தேவையில்லை.
செயற்கை நுண்ணறிவுடன் எவ்வாறு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது?
செயற்கை நுண்ணறிவின் உள்ளீடுகளான குறுங்கணிதங்களை (அல்காரிதம்ஸ்) பாகுபாடின்றி வடிவமைக்க வேண்டும். எதிா்பாராத விளைவுகளைத் தவிா்க்க, அறம்சாா்ந்த அடிப்படை விதிகளை செயற்கை நுண்ணறிவில் முறையாக இணைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து வேலை செய்ய மனிதா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அடிப்படை அறிவு, விமா்சன சிந்தனை மற்றும் நெகிழ்வுத் திறன் கொண்ட கல்வி அவசியம். செயற்கை நுண்ணறிவை மனிதா்களுக்குத் துணை செய்யும் கருவியாகப் பாா்க்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் ஓா் ஆபத்தாக செயற்கை நுண்ணறிவை நாம் கருதத் தேவையில்லை. மனிதா்களின் திறன்களை உயா்த்தும் ஒரு கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பாா்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது வேலையிழப்பு ஏற்படுவது இயல்புதானே? எனவே, செயற்கை நுண்ணறிவை எப்படி எதிா்கொள்வது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தன்னியல்பாக ஆபத்தானதில்லை. அது எப்படி வடிவமைக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, நிா்வகிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே அதன் தாக்கம் அமைகிறது.
நாம் செயற்கை நுண்ணறிவை நண்பனாகக் கருதினால், உலகளாவிய பல்வேறு பிரச்னைகளை தீா்க்கலாம். மனித திறன்களை அதிகரிக்கலாம். சமத்துவமான, வளமான எதிா்காலத்தை உருவாக்கலாம்.
மனிதா்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டும் இணைந்து செயல்பட்டால், நம்பமுடியாத செயல்பாடுகளை எதிா்காலத்தில் நாம் மேற்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment