Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Saturday, September 18, 2021

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அச்சு இயந்திரம் இடமாற்றம்


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அச்சு இயந்திரம் இடமாற்றம்

அச்சு இயந்திரத்தைப் பார்வையிடும் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன்.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சொந்த உபயோகத்துக்காக 39 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்ட அச்சு இயந்திரம், பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பிரத்யேகக் கட்டிடத்தில் சிறப்பாக இயங்குவதால் பல்கலைக்கழகத்தினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த 1981-ம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் என்பவர் தமிழின் ஆராய்ச்சி நூல்கள், தொலைநிலைக் கல்விக்கான நூல்களையும், பல்கலைக்கழகப் பதிப்பு நூல்களையும் தாமே அச்சிட வேண்டும் என்ற குறிக்கோளோடு கடந்த 1982-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் அச்சு இயந்திரத்தை வரவழைத்து அரண்மனை வளாகத்தில் நிறுவினார்.

தொடந்து பல்கைக்கழகப் பதிப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 25.5.1990-ம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி சாலையில் 1,000 ஏக்கர் பரப்பரளவில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு இயங்கி வருகிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

ஆனால், அரண்மனை வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்தால், அந்த இயந்திரம் மறுபடியும் செயல்படாத நிலைக்குச் சென்றுவிடும் எனக் கூறப்பட்டதால், இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 12 துணைவேந்தர்களும் அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.

இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை, விற்பனைத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடங்களில் நிரந்தரப் புத்தக விற்பனைக்கு ஏற்பாடும் செய்யப்பட்ட நிலையில், பதிப்புத்துறைக்குத் தேவையான அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்வது எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் உறுதியாகச் செயல்பட்டார். இதையடுத்துப் புதிய கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அச்சு இயந்திரம் ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் செலவில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டது.

புதிய வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரம் மீண்டும் பொருத்தினால் செயல்படாது எனக் கூறிய நிலையில், தற்போது அந்த இயந்திரம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெருமிதம் அடைகின்றனர்.

இதுகுறித்து பதிப்புத்துறை இயக்குநர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில், ”ஜெர்மன் நாட்டிலிருந்து 39 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுப் பல்கலைக்கழக நூல்கள் அச்சிடப்பட்டு வந்தன. அரண்மனை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப் பலரும் தயக்கம் காட்டிக் கைவிட்ட நிலையில், தற்போதைய துணைவேந்தர் இதில் துணிந்து செயல்பட்டதால் அச்சு இயந்திரத்தைப் புதிய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அச்சிடப்படும் இந்த இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

இந்த அச்சு இயந்திரத்தில் தற்போது பல்கலைக்கழகத்தின் நூல்கள் அனைத்தும் அச்சிடத் தயாராக உள்ளோம். இந்தப் புதிய பதிப்புத்துறை கூடத்தையும், அச்சகத்தையும் முதல்வர் திறந்துவைக்க அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றார்.

Wednesday, September 8, 2021

தொடர்ச்சியாக 3 முகூர்த்த நாட்கள் கொரோனா பரவல் அதிகரிக்குமா?


தொடர்ச்சியாக 3 முகூர்த்த நாட்கள் கொரோனா பரவல் அதிகரிக்குமா?

Added : செப் 07, 2021 22:20

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், தமிழக அரசு தளர்வு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில், 50 பேர் வரை திருமண மண்டபங்களில் கூடலாம். அதனால், திருமண மண்டபங்கள் திறக்கப்பட்டு, ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள், முகூர்த்த நாட்களாக வருகின்றன. அதனால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர் சங்கத்தின், திருவள்ளூர் மாவட்ட தலைவர் அசோகன் கூறியதாவது: சென்னையில், 2,000 உட்பட தமிழகம் முழுதும், 7,000 திருமண மண்டபங்கள் உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பின், மண்டபங்களில் திருமணம் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே, முன்பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே, தேதியை மாற்றி வைத்து தற்போது திருமணம் செய்கின்றனர்.

ஏற்கனவே, மாலை 6:00ல் இருந்து மறுநாள் மாலை 6:00 மணி வரை என, 24 மணி நேரம் கணக்கிடப்பட்டு, மண்டபம் வாடகைக்கு விடப்பட்டது. இப்போது காலை 6:00ல் இருந்து மாலை 6:00 மணி வரையிலான, 12 மணி நேர கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது. அத்துடன் வாடகையையும் குறைத்துள்ளோம்.

யாரும் பெரிய விழாவாக திருமணத்தை நடத்துவது இல்லை. 100 அல்லது, 150 பேரை வரவழைத்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். அதனால், பெரிய திருமண மண்டங்கள், இரண்டு அல்லது மூன்று 'மினி ஹால்'களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. பெரும்பாலான திருமண மண்டபங்களில், கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

மக்களுக்கும், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறி திருமண மண்டபங்களில், ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோரை கூட்டினால், உரியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதே நேரம், மண்டப உரிமையாளர்கள், மண்டபங்களை நம்பி வேலைக்கு இருப்போரின், பொருளாதார நிலைமைகளை மனதில் வைத்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறுவதை, covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall என்ற இணையதளத்தின் வாயிலாக, மாநகராட்சிக்கு தெரியப்படுத்த, மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்த பின், உள்ளே செல்ல வேண்டும். உணவு அருந்தும்போது, கூட்டம், கூட்டமாக அமரக் கூடாது. இடைவெளியுடன் அமர வேண்டும்.முக கவசம் அணியாத நபர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல, திருமண மண்டபங்களில், 50 பேருக்கு மேல் அனுமதித்தால், அதன் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இந்த மூன்று நாட்கள், அதிகளவு நிகழ்ச்சிகள், சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

-ககன்தீப்சிங் பேடி,

கமிஷனர், சென்னை மாநகராட்சி

Sunday, August 29, 2021

பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் பயிற்சி இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?- விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சர் உறுதி


பறக்கும் பாலம் கட்டுமானப் பணியில் பயிற்சி இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா?- விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சர் உறுதி


‘‘போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்த திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

மதுரை நத்தம் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் விபத்து நடந்த பகுதியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டதாகக் கூறுவது தவறு. கட்டுமானப்பணியின்போது எதிர்பாராத ஒரு செயல் நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஹைட்ராலிக் ஜாக்கியை வைத்து காங்ன்க்கீரிட் கர்டரை தூன்கள் மீது தூக்கி வைக்க முயற்சி செய்தபோது ஜாக்கி பழுதடைந்துள்ளது. கான்க்கீரிட் கர்டரை சாதாரணமாக தூக்கி தூன்கள் மீது வைத்திட முடியாது. அதற்காகதான் ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்படுகிறது. போதிய பயிற்சி, நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு ஹைட்ராலிக் ஜாக்கி பயன்படுத்தப்பட்டதா, அது எதனால் பழுதடைந்தது, இந்த பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டதா? பராமரிப்பு குறைபாடா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இந்த விபத்தில் எழுகிறது. ஒப்பந்ததாரர்கள் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

உயிரிழந்த நபரின் வயது 24. அதனால், அவர் ஹைட்ராலிக் பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் போதுமான பயிற்சியே இல்லாமல் இதுபோன்ற ஆபத்தான சிரமமான பணியில் எப்படி எந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காமல் பார்க்க வேண்டும், ’’ என்றார்.

பால வேலை நிறுத்தம்: ஆட்சியர் உத்தரவு:

விபத்தை நேரில் பார்த்த மகேந்திரன் கூறுகையில், ‘‘ஒரு சொந்த வேலை விஷயமாக விபத்து நடந்த பகுதி அருகே நின்று கொண்டிருந்தேன். திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தத்துடன் பாலம் சரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.அடுத்தடுத்து அனைத்து பாலப்பகுதிகளும் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால், பதட்டமடைந்த மக்கள் அங்கிருந்து பாலம் இல்லாத பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடங்கள் விபத்து நடந்த பகுதியில் அருகே செல்ல மக்கள் தயங்கினர். கட்டுமானப்பணி சரியான கண்காணிப்பு இல்லாமல் அலட்சியமாகவே நடந்தது. தற்போது நடந்தவிபத்து ஒரு உதாரணம்தான். அதனால், கட்டுமானப்பணி முடிந்த பாலத்தின் அனைத்து பகுதிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், ’’ என்றனர்.

தங்க கணேஷ் கூறுகையில், ‘‘மேம்பாலம் பணி கடந்த 2 மாதமாக சுத்தமாக நடக்கவில்லை. குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்தனர். மக்களும், வாகன ஓட்டிகளும், நத்தம் சாலையில் செல்லும் போது நரக வேதனையை அனுபவித்து வந்தோம். எதிர்கால பயனுக்காக அதனை சகித்து கொண்டோம். ஆனால், இப்போது கட்டும்போதே பாலம் இடிந்து விழுவதை பார்த்தால் எப்படி அதில் பயணம் செய்ய முடியும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. உரிய விசாரணை நடத்தி பாலம் தரமானதா? இல்லையா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், ’’ என்றார்.

நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலம் தரமாக கட்டப்படுகிறது. தூன்கள் மீது காங்கீரிட் கர்டரை தூக்கு நிறுத்தும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சரிந்து கீழே விழுந்தது. பராமரிப்பை வைத்துதான் பாலத்தின் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பாலம் சர்வதேச தொழில்நுடப்பத்தில் கட்டப்படுவதால் அதன் தரத்தின் சந்தேகம் தேவையில்லை, ’’ என்றனர்.

பாலம் விபத்தால் ஆட்சியர் அனீஸ் சேகர், தற்காலிகமாக பாலம் கட்டுமானப்பணியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

முழுவிசாரணை தேவை: எம்.பி.

விபத்தை நேரில் பார்வையிட்ட சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், ‘‘நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துள்ள செய்தி மிகவும் துயரமானது. இதிலே இரண்டு விஷயங்களை கவனப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, இந்த வேலை நடந்து கொண்டு இருந்த பொழுது இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பணியில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. மிகக்குறைந்த தொழிலாளர்களை ஈடுபத்தியது தான் விபத்துக்கு காரணமா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது, தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது. இவைகள் குறித்தும், விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்றகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ’’ என்றார்.

Monday, August 16, 2021

27,000 சதுர அடி கட்டடங்களுக்கு உள்ளூரிலேயே அனுமதி பெறலாம்!



தமிழ்நாடு

27,000 சதுர அடி கட்டடங்களுக்கு உள்ளூரிலேயே அனுமதி பெறலாம்!

Added : ஆக 16, 2021 00:12

சென்னை-'சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளில், 26 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பு உடைய கட்டடங்களுக்கு, உள்ளூர் அளவிலேயே ஒப்புதல் வழங்கலாம்' என, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல்சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பொறுப்பு, டி.டி.சி.பி.,யிடம் உள்ளது. இதில், பொது கட்டட விதிகளின் அமலாக்கத்துக்காக, சில அதிகார பகிர்வுகளை டி.டி.சி.பி., வழங்கியது.இதன்படி, அதிக உயர மில்லாத கட்டடங்களுக்கு உள்ளூர் நிலையில் ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டது.இந்நிலையில், டி.டி.சி.பி., இயக்குனர் சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு:அதிக உயரமில்லாத கட்டடங்கள் வகையில், 26 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பு உள்ள கட்டடங்களுக்கு, கள அலுவலர் நிலையிலேயே ஒப்புதல் வழங்கலாம்.இது, 18.3 மீட்டருக்கு மிகாத உயரம் உள்ள குடியிருப்பு, வணிக, நிறுவன கட்டடங்களுக்கு பொருந்தும்.

நடைமுறை

இதே போல சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளில், 29 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பில் உள்ள 18.3 மீட்டர் உயர கட்டடங்களுக்கு, மாவட்ட அலுவலர்கள் ஒப்புதல் வழங்கலாம்.நகர பகுதியில் 5ஏக்கர் வரையும்; ஊரக பகுதிகளில் 10 ஏக்கர் வரையிலான மனைப்பிரிவு திட்டங்களுக்கு தலைமையகத்தில் தான் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த வரையறையில், குடும்பத்துக்குள் பங்கு பிரிப்பது, சொந்த உபயோக மனைப்பிரிப்புக்கு, மாவட்ட அலுவலர் ஒப்புதல் வழங்கலாம். இந்த புதிய அதிகார பகிர்வு நடைமுறைகளை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Wednesday, August 11, 2021

'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்'


'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்'

Added : ஆக 10, 2021 20:58

நாக்பூர்:'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது அவரதுகண்ணியத்தை சீர்குலைப்பதற்கு சமமானது' என ஒரு வழக்கில்மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மஹராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா தவாரி என்பவர் கல்யாணமான 45 வயது பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.இதை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணா தவாரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர்கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவில் மளிகை சாமான் பாக்கியை கேட்டதற்கு அந்த பெண் பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை இழிவு படுத்துவதற்கு சமமானது.

மனுதாரர் காதல் கடிதம் கொடுத்த மறுநாள் அந்த பெண்ணிடம்ஆபாச சேஷ்டைகள் செய்துள்ளார்.அத்துடன் கடிதம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அவ்வப்போது அந்த பெண்ணிடம் வாயை சுளித்து கண்ணால் காமவலை வீசியுள்ளார்.

எனவே ஒரு பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதில் 85 ஆயிரம்ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும். மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, July 18, 2021

பிளஸ் 2 மதிப்பெண் நாளை வெளியாகிறது


பிளஸ் 2 மதிப்பெண் நாளை வெளியாகிறது

Added : ஜூலை 17, 2021 22:38

சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கான 'ஆல் பாஸ்' மதிப்பெண் விபரம், நாளை வெளியாகிறது. இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா தொற்று பரவலால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்கள், பிளஸ் 1ல் சில பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும், அவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முந்தைய, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மற்றும் கடந்த ஆண்டின் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 2 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.இதன்படி, ஒவ்வொரு மாணவரும் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்ற விபரம், அரசு தேர்வு துறையின் இணையதளத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு வெளியாகிறது.

Saturday, July 17, 2021

மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு

மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு

Added : ஜூலை 16, 2021 23:37


மானாமதுரை-மானாமதுரை பேரூராட்சி உட்பட தமிழகத்தில் 35 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய பேரூராட்சிகளில் மானாமதுரை முதல் இடத்தில் உள்ளது. மானாமதுரையை ஒட்டியுள்ள மாங்குளம், கொன்னக்குளம், கீழமேல்குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகள் பேரூராட்சி எல்லையை ஒட்டி விரிவடைந்து வருகிறது.தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள மானாமதுரை பேரூராட்சியை தரம் உயர்த்தி நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் மானாமதுரை உட்பட 35 பேரூராட்சிகள்,நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மானாமதுரை பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு முன்பே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,அதனடிப்படையில் தற்போது நகராட்சியாக மாற்றும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

Thursday, July 15, 2021

நிவாரணம் வாங்காத நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்


நிவாரணம் வாங்காத நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள்

Added : ஜூலை 15, 2021 00:50

சென்னை, ஜூலை 15-கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்பை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ளனர்.

முதல்வராக மே மாதம் பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். முதல் தவணையான, 2,000 ரூபாய் அம்மாதம் வழங்கப்பட்டது. அந்த தொகையை, 1.60 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.ஜூனில் இரண்டாவது தவணையான 2,000 ரூபாயுடன், கோதுமை மாவு, ரவை உட்பட 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

அம்மாதம் வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கி கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 2.08 கோடி கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் என மொத்தம், 4,160 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1.59 லட்சம் கார்டுதாரர்கள், நிவாரண தொகையின் இரண்டாவது தவணையை வாங்காமல் உள்ளனர். இதுதவிர 2.63 லட்சம் கார்டுதாரர்கள் மளிகை தொகுப்பை வாங்கவில்லை.

இரண்டையும் சேர்த்து 4.22 லட்சம் பேர், கொரோனா நிவாரண தொகுப்பை வாங்காமல் உள்ளனர். ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் கடைகளுக்கு சென்று, தங்களின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, நிவாரண தொகுப்பை வாங்க முடியும்.

Wednesday, July 14, 2021

'நீட்' வினாத்தாளில் மாற்றம்; முதன்முறையாக 'சாய்ஸ்' கேள்வி


'நீட்' வினாத்தாளில் மாற்றம்; முதன்முறையாக 'சாய்ஸ்' கேள்வி

Updated : ஜூலை 14, 2021 04:04 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2802196

சென்னை : 'நீட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, நீட் வினாத்தாள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 'சாய்ஸ்' அடிப்படையில் பதில் அளிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, செப்., 12ல் நடக்கும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து, நீட் தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது. அடுத்த மாதம், 6ம் தேதி வரை ntaneet.nic.in/ என்ற, இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நீட் வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா, 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண் வழங்கப்படும். இந்த வினாத்தாள் முறையில், இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக, சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், 'ஏ' பிரிவில், 35; 'பி' பிரிவில், 15 என, நான்கு பாடங்களுக்கு தலா, 50 கேள்விகள் வீதம், மொத்தம், 200 கேள்விகள் இடம் பெற உள்ளன. இவற்றில், 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும்.

அதாவது, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என, ஒவ்வொரு பாடத்திலும், 'ஏ' பிரிவில் உள்ள, 35 கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். 'பி' பிரிவில், 15 கேள்விகளில், சாய்ஸ் அடிப்படையில், தங்களுக்கு நன்றாக விடை தெரிந்த, 10 கேள்விகளுக்கு மட்டும், பதில் அளித்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா, ஐந்து கேள்விகள், மாணவர்களின் விருப்பத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

விடைத்தாளில் தவறான விடையை தேர்வு செய்தால், 'மைனஸ்' மதிப்பெண்ணாக, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பதில் அளிக்காவிட்டால், அதற்கு, 'நெகட்டிவ்' மதிப்பெண் கிடையாது என, முந்தைய நடைமுறையே தொடரும் என்றும், விதிகளில் கூறப்பட்டுள்ளது.

மலையாளம், பஞ்சாபி சேர்ப்பு!

'நீட்' தேர்வு, தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி என மொத்தம், 13 மொழிகளில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, 11 மொழிகளில் மட்டுமே தேர்வு நடந்தது. இம்முறை மலையாளமும், பஞ்சாபியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில், எதை தேர்வு செய்தாலும், அனைத்து மாநிலங்களிலும் அந்த மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படும். பட்டியலில் உள்ள மற்ற மொழிகளை தேர்வு செய்தால், அந்தந்த மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். மாநில மொழியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஆங்கிலமும், அவர்கள் தேர்வு செய்த மாநில மொழியும் இணைந்த வினாத்தாள் வழங்கப்படும்.

Wednesday, June 23, 2021

பிலிப்பைன்சில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சிறை


பிலிப்பைன்சில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சிறை

Updated : ஜூன் 23, 2021 07:24 

மணிலா : 'பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 2.1 மில்லியன் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டுட்டார்ட்டே தண்டனைகளுக்கு புகழ் பெற்றவர். போதை கடத்தல் கும்பல்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொலை செய்ததால் அச்சமூட்டும் மனிதராக இவர் பார்க்கப்படுகிறார். எனவே இவரின் எச்சரிக்கைக்கு பலன் இருக்கும் என கருதப்படுகிறது.

Saturday, June 19, 2021

கிரிமினல் நடவடிக்கைக்கு ஆளாவோர் ஓய்வூதியம்: மத்திய அரசு புது உத்தரவு


கிரிமினல் நடவடிக்கைக்கு ஆளாவோர் ஓய்வூதியம்: மத்திய அரசு புது உத்தரவு

Added : ஜூன் 19, 2021 02:01

குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி கொலை குற்றத்துக்காக, தண்டனை பெறும் பட்சத்தில், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில், அரசுப் பணியில் இருக்கும் கணவன் அல்லது மனைவி யாரேனும் இறந்தால், அவரதுஓய்வூதியம் இருவரில் ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கம்.கொலை குற்றம்சில சமயங்களில், சொத்து அபகரிப்பு, கணவரது அல்லது மனைவியின் அரசு வேலையை பெறுதல் போன்ற தவறான நோக்கத்தில், கணவன், மனைவி என இருவரில் ஒருவர், மற்றொருவரை கொலை செய்வதும் அல்லது கொலைக்கு உடந்தையாக இருக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இவ்வாறு, கொலை குற்றத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டவருக்கும், வழக்கு விசாரணை நடக்கும் சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும், முன்பு ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டது.இதனால், இச்சம்பவத்தில் தொடர்பு இல்லாத இறந்தவரின் வயதான பெற்றோர், வாரிசுகள் என குடும்ப உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் நலத்துறை, அனைத்து அமைச்சகம் மற்றும் அரசு துறைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கொலை குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்யும் பட்சத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியத்தை அவருக்கு வழங்க வேண்டும்.

ஒருவேளை தண்டனை விதிக்கப்பட்டதால், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கலாம்.அரசு பணியாளர்வாரிசுகள், 'மைனர்' ஆக இருந்தால் காப்பாளரை நியமித்து ஓய்வூதியம் பெற்று, குழந்தைகளுக்கு வழங்கலாம். ஆனால், காப்பாளர் இக்கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கக் கூடாது.அரசு பணியாளர் இறந்த தேதியில் இருந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய நிலுவையை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.கு

ற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்யும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்தி, விடுதலை ஆனவருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Thursday, June 10, 2021

கருணைப் பணி 10 ஆண்டுகளுக்கு பின் நிராகரிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து


கருணைப் பணி 10 ஆண்டுகளுக்கு பின் நிராகரிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து

Added : ஜூன் 10, 2021 02:21

மதுரை:குறித்த காலத்தில் கருணைப் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை என அடிக்கடி அரசுத்துறையில் நிராகரிக்கின்றனர். அதேசமயம் குறித்த காலத்தில் மனு செய்தும் 10 ஆண்டுகளாக நிலுவையில் வைத்து நிராகரித்ததை ஏற்க முடியாது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

நாகர்கோவில் மனோபிரியா தாக்கல் செய்த மனு:எனது தந்தை முருகன் தமிழாசிரியராக அரசுப் பள்ளியில் பணிபுரிந்து 2007 ல் இறந்தார். கருணைப் பணி நியமனம் கோரி 2007 ல் பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பினேன். எனக்கு 2011 ல் திருமணம் ஆனது. நான் முதுகலை பட்டம், பி.எட்.,மற்றும் எம்.பில்., படித்து கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளேன்; எனது கணவர் பி.இ.,முடித்து தனியார் பொறியியல் கல்லுாரியில் பணிபுரிகிறார் எனக்கூறி மனுவை பள்ளிக் கல்வித்துறை 2017ல் நிராகரித்தது.

அதை ரத்து செய்து கருணைப் பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனோபிரியா மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு:மனு 10 ஆண்டுகளாக பரிசீலிக்கப்படாமல் ஏன் நிலுவையில் வைக்கப்பட்டது என்பதற்கு நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலரின் பதில் திருப்திகரமாக இல்லை.

குறித்த காலத்தில் கருணைப் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை; தாமதம் ஏற்பட்டுள்ளது என அடிக்கடி அரசுத்துறையில் நிராகரிக்கின்றனர். அதேசமயம் குறித்த காலத்தில் மனு செய்தும் 10 ஆண்டுகளாக நடவடிக்கை இன்றி நிலுவையில் வைத்திருந்ததை பொருத்திப் பார்க்க வேண்டும்.தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் மனுதாரர் குடும்ப பொருளாதார நிலை மற்றும் இதர சூழ்நிலைகளை ஆய்வு செய்து நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் அறிக்கை பெற வேண்டும். அதன்படி மறு பரிசீலனை செய்து தகுதி அடிப்படையில் 4 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

Tuesday, June 8, 2021

மாலை 5:00 மணி வரை ரேஷன் கடைகள் உண்டு

மாலை 5:00 மணி வரை ரேஷன் கடைகள் உண்டு

Added : ஜூன் 08, 2021 00:31

சென்னை : சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள், இன்று முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.

தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவை, காலை முதல் மாலை வரை செயல்பட்டன.கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையை தடுக்க, மே 10ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அன்று முதல் ரேஷன் கடை வேலை நேரம் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. முழு ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து இன்று முதல், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், காலை 9:00 முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம், மறு உத்தரவு வரை நடைமுறையில் இருக்கும். நிவாரண நிதி இரண்டாம் தவணை, 2,000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வரும், 15ம் தேதி முதல் கார்டுதாரர்கள் பெற்று செல்ல ஏதுவாக, 'டோக்கன்'கள் வினியோகத்தை, 11ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, கடை ஊழியர்கள், பிற்பகல் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

வரும், 11ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, முற்பகல் நேரத்தில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம் போல் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்க வேண்டும் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

Added : ஜூன் 08, 2021 00:09

சென்னை : கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில், ஏப்ரல் முதல் இந்த மாதம் வரை தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சிகளின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

கிறுக்குத்தனமாக பதில் அளிப்பேன்! வெறுப்பேற்றிய வேளாண் அமைச்சர்


கிறுக்குத்தனமாக பதில் அளிப்பேன்! வெறுப்பேற்றிய வேளாண் அமைச்சர்

Added : ஜூன் 08, 2021 01:31

தஞ்சாவூர் : ''கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், கிறுக்குத்தனமாகத் தான் பதில் அளிப்பேன்,'' என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

அமைச்சரின் பேச்சுக்கு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடி தொடர்பாக, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், தஞ்சையில் நேற்று நடந்தது. இதில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு பின், அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், 'நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு, 40 ரூபாய் விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்படுகிறதே' என கேள்வி எழுப்பினர்.

உடனே அமைச்சர், ''இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், கிறுக்குத்தனமாகத் தான் நானும் பதில் அளிப்பேன்,'' என்றார். கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல், பத்திரிகையாளர் களை அவமதிக்கும் வகையில், அமைச்சர் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் பொறுப்பற்ற பதிலுக்கு, விவசாய சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது: விவசாயிகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக, நிருபர்கள் கேள்வி கேட்கின்றனர்.

அதற்குப் பொறுப்பாக பதில் அளிக்க வேண்டிய அமைச்சர், பொறுப்பற்ற முறையில் பேசிஉள்ளார்.இதுபோன்று, அமைச்சர் பொது இடத்தில் பதில் அளிக்கும் பட்சத்தில், ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை என்பது போலத் தான் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விவசாய துறைக்கு இவர் பொருத்தமானவரா என்பதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அதிகாரிகள் குழு பயணம்தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவம் துவங்கியுள்ளது. இப்பருவத்தில், 3.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய, வேளாண் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுவரை, 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.காவிரி நீர், கடைமடைக்கு சென்று சேர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள், வாய்க்கால்கள் துார்வாரும் பணிகள், 67 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. சாகுபடி பணிகள் குறித்து ஆய்வு செய்ய, வேளாண் துறையினருக்கு, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் சாகுபடி நிலவரம், விதை நெல், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கையிருப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர். சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Saturday, May 29, 2021

2ம் தவணை நிவாரண தொகை வீடுகளில் வழங்க வலியுறுத்தல்


2ம் தவணை நிவாரண தொகை வீடுகளில் வழங்க வலியுறுத்தல்

Added : மே 29, 2021 00:15

சென்னை:கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2,000 ரூபாயை, ரேஷன் கடைகளுக்கு பதில் வீடுகளில் வழங்குமாறு, தமிழக அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நிவாரணமாக 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 4,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில், முதல் தவணையான 2,000 ரூபாய், இம்மாதம் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 97 சதவீதம் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நிவாரண தொகை வழங்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது தவணையான 2,000 ரூபாய் வழங்கும் பணி, விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த மாதம், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் தொகுப்பு, மத்திய அரசின் கூடுதல் அரிசி போன்றவை வழங்கப்பட உள்ளன. அதற்கு முன், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை, ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதில் வீடுகளில் நேரடியாக வழங்குமாறு, அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு ரேஷன் கடையில், குறைந்தது 800 முதல் 1,000 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. அந்த கடை ஊழியர், நிவாரண தொகையாக 20 லட்சம் ரூபாயை கையாள வேண்டியுள்ளது. தினமும் 200 கார்டுக்கு கொடுத்தால், 4 லட்சம் ரூபாயை கையாள வேண்டும்.அவ்வளவு பெரிய தொகையை தினமும் எடுத்து சென்றால், தொலைப்பது, திருட்டு போன்றவை நடக்க வாய்ப்புள்ளது.

அரசியல் கட்சியினர், முதலில் தங்களின் பகுதிக்கு வந்து நிவாரணம் வழங்குமாறு ஊழியர்களை கட்டாயப்படுத்துவர்.இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவே, வீடுகளுக்கு பதில் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இரண்டாவது தவணை நிவாரண தொகையை வீடுகளில் வழங்குமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தபடி உள்ளன. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி: விலை ரூ.1,195 ஆக நிர்ணயம்


அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி: விலை ரூ.1,195 ஆக நிர்ணயம்

Updated : மே 28, 2021 16:16 | Added : மே 28, 2021 16:14 |

புதுடில்லி: 'இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஜூன் மாதத்திலிருந்து செலுத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்19 வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த மே 1ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் சோபனா காமினேனி தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து, அப்பல்லோ மருத்துவமனைகள் வாயிலாக 80 இடங்களில், 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் 10 லட்சம் பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். அதேவேகத்தில் சென்றால் செப்டம்பர் மாதத்துக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கி விடுவோம். இதுவே எங்கள் இலக்கு.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ஒரு டோசுக்கு ரூ.1,195 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி மருந்தின் விலை 995 ரூபாய். ஊசி செலுத்துவதற்கான கட்டணம் ரூ.200 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, May 21, 2021

மே மாத மின் கட்டணம்: பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்


மே மாத மின் கட்டணம்: பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்

Updated : மே 20, 2021 22:28 | Added : மே 20, 2021 22:26 |

சென்னை:மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக மதிப்பிட்டு, அதை வாட்ஸ் அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக தாமே கணக்கீடு செய்து கொள்ளலாம் என்றும் அதை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள். மதிப்பீடு உறுதி செய்யப்பட்டால் இணைய வழியில் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Sunday, May 16, 2021

ரேஷனில் ரூ.2,000 வாங்க மக்கள் ஆர்வம்

ரேஷனில் ரூ.2,000 வாங்க மக்கள் ஆர்வம்

Updated : மே 15, 2021 20:26 | Added : மே 15, 2021 20:13

சென்னை:ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்ட, 2,000 ரூபாயை, அரிசி கார்டுதாரர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மக்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டது.இதனால், முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, நிவாரணமாக தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.அந்த தொகை, கார்டுதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் என, இரு தவணையாக வழங்கப்பட உள்ளது.

முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 10ம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, நேற்று முதல் வழங்கப்பட்டது.நிவாரண தொகை வாங்குவதற்காக, 'டோக்கன்' வழங்கப்பட்ட கார்டுதாரர்கள், காலை, 7:00 மணிக்கே ரேஷன் கடைகள் முன் குவிந்தனர். கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில், கடைகளுக்கு முன் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.

அதன் மேல் கார்டுதாரர்கள் வரிசையாக நின்றனர்.காலை, 8:00 மணிக்கு கடைகள் திறந்ததும், நிவாரண தொகை வழங்கும் பணி துவங்கியது.விரைந்து வழங்குவதற்காக, கார்டு தாரர்களின் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ரேஷன் கார்டு அல்லது 'ஆதார்' கார்டை, 'ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பழைய முறையை பின்பற்றி, நிவாரண தொகை வழங்கப்பட்டது.

பெரும்பாலான கடைகளில், நான்கு, 500 ரூபாய் நோட்டுகள் வீதம், 2,000 ரூபாய் வழங்கப் பட்டது. சில கடைகளில் மட்டும், 2,000 ரூபாய் ஒரு நோட்டு வழங்கப்பட்டது. சென்னை உட்பட பல மாவட்டங்களில், காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது. அதையும் பொருட் படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து, கார்டுதாரர்கள் நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.இம்மாதம் இறுதி வரை, நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால், அதை வாங்க, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து கார்டுதாரர்கள் கூறுகையில், 'ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல், வீடுகளில் முடங்கி உள்ளோம். கையில் பணம் இல்லாத சூழலில், நிவாரண தொகையான, 2,000 ரூபாயை வைத்து, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும்' என்றனர்.

எதற்கு இந்த கூட்டம் சேர்ப்பு?

கொரோனாவை அடக்குகிறேன் என, ஒரு பக்கம் முழு ஊரடங்கு அறிவிப்பு; மற்றொரு பக்கம், 'ரேஷன் கடை வழியே 2,000 ரூபாய் கொடுக்கிறோம்; ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்கிறோம்; காலை, 10:00 மணி வரை கடை திறக்கிறோம்' எனச் சொல்லி, கொரோனாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

இந்த தவறை தான், அ.தி.மு.க., அரசும் செய்தது. அப்போது வாய்க்கு வாய் வசை பாடிய, தி.மு.க., இப்போது ஆட்சிக்கு வந்ததும், அதே தவறை, சற்றும் பிசகாமல் செய்கிறது. 'வாழ்வாதாரம் போகிறது' என கூப்பாடு போடுவோருக்கு ஒரு வேண்டுகோள்... முதலில் நமக்கு உயிர் முக்கியம்; அதை பாதுகாக்காமல், வாழ்வாதாரம் தேடுவது வீண்; புரிந்து கொள்ளுங்கள்!

Wednesday, May 12, 2021

இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா ஆர்வம்


இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா ஆர்வம்

Updated : மே 12, 2021 08:07 | Added : மே 12, 2021 08:05

புதுடில்லி: இந்தியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகத்தின் உயர் அதிகாரி டேனியல் ஸ்மித் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலையை பார்த்து, அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த நெருக்கடியில் இந்தியாவுக்கு துணை நிற்க, அமெரிக்க அரசு உறுதி எடுத்துள்ளது.

இ ந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பது போல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 2.5.2024