கருணைப் பணி 10 ஆண்டுகளுக்கு பின் நிராகரிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து
Added : ஜூன் 10, 2021 02:21
மதுரை:குறித்த காலத்தில் கருணைப் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை என அடிக்கடி அரசுத்துறையில் நிராகரிக்கின்றனர். அதேசமயம் குறித்த காலத்தில் மனு செய்தும் 10 ஆண்டுகளாக நிலுவையில் வைத்து நிராகரித்ததை ஏற்க முடியாது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
நாகர்கோவில் மனோபிரியா தாக்கல் செய்த மனு:எனது தந்தை முருகன் தமிழாசிரியராக அரசுப் பள்ளியில் பணிபுரிந்து 2007 ல் இறந்தார். கருணைப் பணி நியமனம் கோரி 2007 ல் பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பினேன். எனக்கு 2011 ல் திருமணம் ஆனது. நான் முதுகலை பட்டம், பி.எட்.,மற்றும் எம்.பில்., படித்து கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளேன்; எனது கணவர் பி.இ.,முடித்து தனியார் பொறியியல் கல்லுாரியில் பணிபுரிகிறார் எனக்கூறி மனுவை பள்ளிக் கல்வித்துறை 2017ல் நிராகரித்தது.
அதை ரத்து செய்து கருணைப் பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனோபிரியா மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு:மனு 10 ஆண்டுகளாக பரிசீலிக்கப்படாமல் ஏன் நிலுவையில் வைக்கப்பட்டது என்பதற்கு நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலரின் பதில் திருப்திகரமாக இல்லை.
குறித்த காலத்தில் கருணைப் பணி கோரி விண்ணப்பிக்கவில்லை; தாமதம் ஏற்பட்டுள்ளது என அடிக்கடி அரசுத்துறையில் நிராகரிக்கின்றனர். அதேசமயம் குறித்த காலத்தில் மனு செய்தும் 10 ஆண்டுகளாக நடவடிக்கை இன்றி நிலுவையில் வைத்திருந்ததை பொருத்திப் பார்க்க வேண்டும்.தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் மனுதாரர் குடும்ப பொருளாதார நிலை மற்றும் இதர சூழ்நிலைகளை ஆய்வு செய்து நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் அறிக்கை பெற வேண்டும். அதன்படி மறு பரிசீலனை செய்து தகுதி அடிப்படையில் 4 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment