தொடர்ச்சியாக 3 முகூர்த்த நாட்கள் கொரோனா பரவல் அதிகரிக்குமா?
Added : செப் 07, 2021 22:20
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில், தமிழக அரசு தளர்வு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில், 50 பேர் வரை திருமண மண்டபங்களில் கூடலாம். அதனால், திருமண மண்டபங்கள் திறக்கப்பட்டு, ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள், முகூர்த்த நாட்களாக வருகின்றன. அதனால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர் சங்கத்தின், திருவள்ளூர் மாவட்ட தலைவர் அசோகன் கூறியதாவது: சென்னையில், 2,000 உட்பட தமிழகம் முழுதும், 7,000 திருமண மண்டபங்கள் உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பின், மண்டபங்களில் திருமணம் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே, முன்பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே, தேதியை மாற்றி வைத்து தற்போது திருமணம் செய்கின்றனர்.
ஏற்கனவே, மாலை 6:00ல் இருந்து மறுநாள் மாலை 6:00 மணி வரை என, 24 மணி நேரம் கணக்கிடப்பட்டு, மண்டபம் வாடகைக்கு விடப்பட்டது. இப்போது காலை 6:00ல் இருந்து மாலை 6:00 மணி வரையிலான, 12 மணி நேர கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது. அத்துடன் வாடகையையும் குறைத்துள்ளோம்.
யாரும் பெரிய விழாவாக திருமணத்தை நடத்துவது இல்லை. 100 அல்லது, 150 பேரை வரவழைத்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். அதனால், பெரிய திருமண மண்டங்கள், இரண்டு அல்லது மூன்று 'மினி ஹால்'களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. பெரும்பாலான திருமண மண்டபங்களில், கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
மக்களுக்கும், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கட்டுப்பாடுகளை மீறி திருமண மண்டபங்களில், ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோரை கூட்டினால், உரியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதே நேரம், மண்டப உரிமையாளர்கள், மண்டபங்களை நம்பி வேலைக்கு இருப்போரின், பொருளாதார நிலைமைகளை மனதில் வைத்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறுவதை, covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall என்ற இணையதளத்தின் வாயிலாக, மாநகராட்சிக்கு தெரியப்படுத்த, மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்த பின், உள்ளே செல்ல வேண்டும். உணவு அருந்தும்போது, கூட்டம், கூட்டமாக அமரக் கூடாது. இடைவெளியுடன் அமர வேண்டும்.முக கவசம் அணியாத நபர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல, திருமண மண்டபங்களில், 50 பேருக்கு மேல் அனுமதித்தால், அதன் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இந்த மூன்று நாட்கள், அதிகளவு நிகழ்ச்சிகள், சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
-ககன்தீப்சிங் பேடி,
கமிஷனர், சென்னை மாநகராட்சி
No comments:
Post a Comment