தாம்பரம் நகராட்சி பகுதியில் சாலைகளில் விதிகளை கடைபிடிக்காமல் வேகத்தடைகள்
தாம்பரம் 08.09.2021
தாம்பரம் நகராட்சி பகுதியில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படுகின்றன.
வேகத்தை குறைப்பதற்காகவும் விபத்தை தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்ற 'ஸ்பீடு பிரேக்' எனப்படும் வேகத்தடையால் தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் தினசரி விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
சாலைகளின் எந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கலாம் என்பதை சாலை பாதுகாப்பு குழு ஆய்வு செய்யும். இந்த குழுவின் அறிக்கைப்படி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் பரிசீலனை செய்து வேகத்தடை அமைக்க ஒப்புதல் வழங்கும். பின்னர், விதிமுறைப்படி வேகத்தடையும், அது குறித்த எச்சரிக்கை பலகைகளும் அந்த இடங்களில் வைக்கப்படும்; இதுதான் நடைமுறை. ஆனால், யாரும் இதன்படி செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் சேலையூரை சேர்ந்த ஹேமகுமார்(30) என்ற இளைஞர் கிழக்கு தாம்பரம், பாரத மாதா சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தவறி விழுந்து தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் வேக கட்டுப்பாடுக்கு பயன்பட வேண்டிய வேகத்தடைகள் மரண மேடுகளாக மாறுவதற்கு, முறையான உயரத்தில் வேகத்தடைகள் இல்லாததும் அதற்கான எச்சரிக்கை பலகைகளை எங்கேயும் முறையாக வைக்காததுமே முக்கிய காரணங்களாகும்.
வேகத்தடை விதிமுறைகள்
குறைந்தது 40 மீட்டருக்கு முன்பாக வேகத்தடை என்றஎச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்க வேண்டும். 17 மீட்டர் ஆரம் கொண்டதாகவும், 3.7 மீட்டர் அகலத்துடனும், அதிகபட்சமாக 10 செ.மீ. உயரத்திலும் மட்டுமே வேகத்தடைகள் இருப்பது அவசியமாகும். பிரதிபலிக்கும் வகையிலான பெயின்டை வேகத்தடை மேடுகளின் மீது பூச வேண்டும். 10 மீட்டர் தொலைவுக்குள் இரு வேகத்தடைகளை ஏற்படுத்தக் கூடாது. ஆனால் இந்த விதிகளை உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறையினர் பின் பற்றுவதில்லை என்றனர்.
இதுகுறித்து தாம்பரம் நகராட்சி ஆணையர் இரா.லெட்சுமணன் கூறும்போது, "விபத்து நடந்த பாரத மாதா சாலையில் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாம்பரம் முழுவதும் வேகத் தடைகளின் மீது பிரதிபலிக்கும் வகையிலான பெயின்ட் அடிக்கப்படும். எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
No comments:
Post a Comment