வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.
இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.
எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.
இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.
காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.
திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.
தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.
இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.
இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.
- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in