கரூர் பேருந்து நிலையத்தில் ஜன.27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது வெறும் 'சிங்கிள் காலம்' செய்தி அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டதைச் சொல்லும் செய்தி.
அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட, போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால், அவரால் எழ முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் நேற்று நீக்கப்பட்டார்.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியபோது, "மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்" என்றார்.
இந்த நடவடிக்கை சரிதானா?
பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சரியானதுதானா? மாணவனுக்கு தண்டனை அளிப்பது நியாயமா? என்பது இங்கே விவாதத்துக்குரியது.
மாணவர்கள் இனி இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், ஒட்டுமொத்த மாணவ சமூகமும் திருந்த வேண்டும், கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே மாணவனுக்கு இந்தத் தண்டனையை அளித்திருப்பது பொருத்தமற்றது.
16 வயது மாணவர் ஒருவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுத் தந்தவர் யார்? எங்கிருந்து அந்த மது கிடைத்தது? யார் மூலம் கிடைத்தது? அந்த மதுவை மாணவனுக்கு வழங்கியது யார்? மது வாங்கிய இடம் எதற்கு அருகில் இருந்தது? மது விற்பனைக்கான அங்கீகாரத்தை வழங்கியது யார்? மது வாங்குவதற்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது?
இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில், அதில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த மாணவனை மது அருந்தத் தூண்டிய குற்றவாளிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த மாணவர் திமிரெடுத்து தவறு செய்ததற்கு அரசாங்கத்தையும், டாஸ்மாக்கையும், சூழலையும் எப்படி குறை சொல்ல முடியும்? மாணவர்கள்தான் இந்தச் சமுதாயத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள் என்று ஆவேசத்துடன் கவுன்டர் கொடுக்கத் துடிக்கும் கருத்து கந்தசாமியா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
பிறக்கும்போதே யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. வளர்ப்பும் சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது. அப்படி என்றால், அந்த மாணவர் வழி தவறிய பாதையில் நடப்பதற்குக் காரணமாக இருந்தது யார்?
மாணவர் ''நான் தப்பான வழியில்தான் நடப்பேன். அப்போதுதான் இந்த உலகம் என்னை உற்றுக் கவனிக்கும்'' என்று நினைத்தா செயல்பட்டிருப்பார்? இல்லை ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போதையில் மயங்கி விழுந்திருப்பாரா? கொஞ்சம் நிதானமாக ரிலாக்ஸாக முடிந்தால் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு ஆசுவாசமான மனநிலையில் யோசித்துப் பாருங்கள்.
பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் எங்கே இருந்து தொடங்குகிறது?
பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும் உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது பெற்றோர்களும், உறவினர்களும்தான். பலர் தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதைப் பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சில தருணங்களில் அதை சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்ட குறை, விட்ட குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது.
முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல், சமூக விரோதி, ஒழுக்கம் கெட்டவன் என்று பல்வேறு பட்டங்கள்.
இப்படிக் கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள்.
வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி சீர்குலைந்து போய்விடுகிறார்கள்.
புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை:
தமிழகத்தின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் (15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்) என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பருவம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான காலகட்டம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் நலனில் யாரும் அக்கறை காட்டுவதில்லை.
மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் அதை செய்யத் தவறிவிடுகின்றனர்.
உலக அளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் மது உள்ளிட்ட போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சம். மொத்தமாக 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா. சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருளால் சமூகம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 12 - 25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இப்படி தவறான பாதையில் மாணவர்கள் செல்லக் காரணமானவர்கள் யார்?
பெற்றோர்கள், பள்ளியின் சூழல், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்தவர், மது விற்பனைக்கு அனுமதி தந்த அரசு என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இதில் சிலரோ அல்லது பலரோ முக்கியக் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.
அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மாணவனை தண்டிப்பது ஏன்? இது குறித்து நம் வாசகர்களே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
என்ன சொல்கிறார்கள் நம் 'தி இந்து' ஆன்லைன் வாசகர்கள்?
* ''எல்லாம் சரியா போச்சா? கவுன்சலிங் கொடுத்து நல்ல பையனா மாற்ற முயற்சி செய்து இருக்க வேண்டும். முட்டாள்தனமான முடிவு'' என்கிறார் ஹெரிடேஜ் ஹெல்த் நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜேம்ஸ் ராபின்சன்.
* ''கொஞ்சம் ஓவரா போயிருச்சு... இதுக்கெல்லாம் தண்டனையா? மதுவை ஒழிக்க வழி உள்ளதா பாருங்கள். இல்லாவிட்டால் எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். பாவம் மாணவனின் கல்வி பாதிக்கக் கூடாது. சிறிய அபராதம் விதித்து மாணவனை மீண்டும் கல்வி பயில அனுமதியுங்கள்'' என்கிறார் கந்தசாமி எனும் வாசகர்.
* ''நமது குற்றவியல் நடைமுறைச்சட்டம் சொல்வது என்ன? குற்றம் செய்தவர்களை விட குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கே தண்டனை என்றுதானே சொல்கிறது. இதில் மட்டும் ஏன் எய்தவன் இருக்க அம்புக்கு ஏன் தண்டனை?'' என்று கேள்வி எழுப்புகிறார் தங்கவேல் சாமி.
* ''பள்ளி மாணவனுக்கு சாராயம் விற்ற சாராயக்கடை விற்பனையாளரான அந்த தெய்வத்திற்கு பணி உயர்வு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தவறு நடந்த இடத்தை நய்யாண்டியுடன் துல்லியமாக சுட்டிக் காட்டுகிறார் மகேந்திரன் ராமசாமி.
* ''பள்ளியை விட்டு நீக்குவதால், அந்தப் பையனை இன்னும் சமூகத்தில் இருந்து ஒதுக்கத்தான் செய்கிறோம், அவனுடைய வெட்கவுணர்வையும் பயத்தையும் ஒட்டுமொத்தமாக உடைப்பதன் மூலம் ஒன்று அவன் மிகப் புரிதல் உள்ளவனாக ஆகலாம், அல்லது ஒட்டுமொத்தமாக சமூகத்தால் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டாவதற்கான வாய்ப்புகளைத் தான் சமூகம் தயாராகக் கையில் திணிக்கின்றது! முதலில் நான் cool-ஆனப் பையன் அல்லது பெண் எனும் முட்டாள்தனமான விடயங்களிலிருந்து சிறுவர்களை வெளியில் கொண்டுவருவது மாதிரியான மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டியது முக்கியம்'' என்கிறார் ஈஸ்வர்.
* ''இந்த சம்பவத்தை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தால்தான் தமிழக பள்ளி மாணவர்களையும் ஏழை எளிய பெண்களின் மாங்கல்யத்தையும் காக்க முடியும். உயர் நீதிமன்றம் முன்வருமா?'' என்கிறார்கார்மேக பாண்டி.
* ''முட்டாள் நிர்வாகம். மாணவர் மது அருந்தியது அவனுடைய தவறு மட்டுமல்ல. அதற்கு காரணமான அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அதிக பணம் தரும் பெற்றோருக்கும் தண்டனை வேண்டும். அரசாங்கமும் திருந்தவேண்டும். மேலும் மாணவனின் நலன் இங்கு முக்கியம். அவனுக்கு மேலும் ஒரு வைப்பு தர வேண்டும். நம் நாட்டில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் மாணவர் கூட சீக்கிரம் வெளியில் வரும்போது குடித்ததற்காக பள்ளியில் இருந்து அணிப்பியது தவறு'' என்கிறார் ராமன்.
* 'அதிமுக மற்றும் திமுகவின் சாதனை' என்று ஜே.எம்.எஸ். என்ற வாசகர் குத்திக் காட்டியிருக்கிறார்.
ஆண்... இனிய இல்லத்தின் தூண். குடும்பத்தை வழிநடத்தும் ஆணிவேர். ஆணிவேர் நன்றாக இருக்கும் வரை, குடும்பமும் நன்றாக இருக்கும். ஆனால், ஆணாக தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு முன்பாக, அவனை சிதைத்து ஒழுக்கம் கெட்டவன் என்ற முத்திரை குத்திவிட்டால் அவன் வருங்காலம் என்ன ஆகும்?
ஆசிரியர், ஐஏஎஸ், இன்ஜினீயர் என்று அவன் காணும் கனவுக்கு நாம் கொள்ளி வைத்துவிடுவது எந்த விதத்தில் ஏற்புடையது?
இப்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பண்பாட்டுக் கல்வி முறை மிகவும் அவசியம். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். கோபதாபங்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றியெல்லாம் சிறு வயதில் இருந்தே நாம் போதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பருவத்தை அடைந்தவுடன், வாழ்க்கை முறையை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இனியாவது குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, ஆளுமைமிக்க மாணவர்களை வளர்த்தெடுப்போம்.