முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தாவிட்டாலும், அவர்களின் உறவினர்கள் அதை வைத்து பயணம் செய்யலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்து வாகனமாக ரயில்கள் உள்ளன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்கும் போது, அதன் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க 2 மாதங்களுக்கு முன்பே பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்கின்றனர்.
அப்படி முன்பதிவு செய்துகொண்டவர்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் போனால் அவர்களின் உறவினர்கள் அந்த டிக்கெட்டை வைத்து பயணம் செய்துகொள்ளலாம் என்ற வசதி உள்ளது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் இதை பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “‘விரைவு ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாவிட்டால் அந்த டிக்கெட்டில் அவர்களின் உறவினர்கள், அதாவது அவரின் குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பயணம் செய்யலாம். அதற்கு சம்பந்தப்பட்ட ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவணம் காண்பித்து ஒருநாள் முன்பாக கையொப்பத்தை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment