திருநெல்வேலி: இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இதுவரை நிகழ்ந்திராத ஒரு அதிசயம் இன்று நடந்துள்ளது. குறித்த நேரத்தில் ரயில்கள் வருவதையே அதிசயமாக பார்ப்பது நமது வழக்கம். அப்படி குறித்த நேரத்தில் வந்தால், ஒருவேளை நேற்று வரவேண்டிய ரயிலோ என்ற சந்தேகத்துடன் பார்ப்போம்.
இத்தகைய சூழ்நிலையில், இன்று சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி 5 நிமிடம் முன்னதாக வந்து சாதனை படைத்தது. வழக்கமாக காலை 8 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் இந்த ரயில் காலை 6:55க்கு எல்லாம் தாழையூத்து வந்து விட்டது. ஆனால் ரயில் ஒரு மணி நேரம் முனனாலேயே வரும் என்று எதிர்பார்க்காத திருநெல்வேலி ரயில் நிலைய ஊழியர்கள், அந்த ரயில் வழக்கமாக வரும் முதல் நடைமேடையை காலியாக வைக்காததால், ரயிலை தாழையூத்திலேயே நிறுத்தி வைக்க நேர்ந்தது.
பின்னர் நடைமேடை தயாரானதும் ரயில் தாழையூத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் வந்தடைந்தது.இவ்வாறு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் வந்தது குறித்து, ரயில் பயணிகள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்ததாக அந்த ரயிலின் கார்டு தெரிவித்தாலும் ஒரு சின்ன சந்தேகம். இந்த ரயில் இரவு நேரத்தில் பயணித்துள்ளது. இப்படி ஒரு மணி நேரம் முன்கூட்டியே வந்ததால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் சரியாக இறங்கி, ஏற முடிந்ததா? ஒரு மணி நேரம் முன்கூட்டியே இவ்வாறு ரயில் பயணிக்க ரயில் விதிமுறைகள், சிக்னல்கள் எப்படி அனுமதித்தன?
எப்படியோ ஒரு கின்னஸ் சாதனை படைத்த ரயில் ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment