Thursday, February 5, 2015

வாடகையை உயர்த்த வலியுறுத்தி போராட்டம் 5 நாட்களாக நடைபெற்ற டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்



மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை லாரிகளுக்கான வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய வாடகை ஒப்பந்தம்

அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு டன் அடிப்படையில் கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 76 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வந்தன. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் கிழக்கு, வடக்கு, மேற்கு மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினத்தினரிடம், எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 80 காசுகள் வழங்குவதாக புதிய வாடகை ஒப்பந்தம் போடப்பட்டது.

போராட்ட அறிவிப்பு

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல மொத்த சமையல் கியாஸ் (பல்க் எல்.பி.ஜி.) டேங்கர் லாரி உரிமையாளர்கள் (தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா,கேரளா மாநிலங்களை உள்ளடக்கியது) சங்கத்தினரிடம், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வாடகை ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

லாரி உரிமையாளர்கள் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 9 காசு (1 டன் அடிப்படையில்) வாடகை தர வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். எண்ணெய் நிறுவனங்கள் 2 ரூபாய் 96 காசு வழங்குவதாக அறிவித்து வந்தன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கடந்த மாதம் 30-ந் தேதி நள்ளிரவு முதல் தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

தமிழக அரசு முயற்சி

பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. அதன்படி, கடந்த 2-ந் தேதி சென்னை எழிலகத்தில், தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

சமையல் கியாஸ் டேங்கர் லாரி சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளாக நேற்று தொடர்ந்தநிலையில், மீண்டும் சென்னை எழிலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐ.ஓ.சி.) மும்பை பொதுமேலாளர் மாலிக், பாரத் பெட்ரோலியம் மும்பை பொதுமேலாளர் சுதிஜ் மாலிக், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் சுகுமார் நந்தி மற்றும் அதிகாரிகளும், தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் உள்பட 10 நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

போராட்டம் வாபஸ்

காலை 11 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. மதியம் 1.30 மணி அளவில் உணவு இடைவெளி விடப்பட்டது. பின்னர் 3.45 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடமும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடமும் தனித்தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின்போது, கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம், பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் மாலை 5.45 மணி அளவில் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

லாரி உரிமையாளர்கள் பேட்டி

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்கள் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் தற்போதிலிருந்து இயங்க தொடங்கும்.

இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனங்களுடன் வாடகை நிர்ணயம் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. வாடகை நிர்ணயம் குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நாளை (இன்று) நடக்க உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

எண்ணெய் நிறுவன அதிகாரிகள், சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.சி. அலுவலகத்தில் இன்று நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘எண்ணெய் நிறுவனங்களும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஒரு சுமுக முடிவுக்கு வந்துவிட்டனர். நாளை (இன்று) நடைபெறும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் புதிய வாடகை ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உள்ளது’ என்றார்.

கியாஸ் நிரப்பும் பணி பாதிப்பு

சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 நாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சமையல் கியாஸ் நிரப்பும் மையங்களில் கியாஸ் நிரப்பும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை நிரப்பும் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்திப்பட்டில் இருந்து சீரான சமையல் கியாஸ் சப்ளை இருந்ததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சமையல் கியாஸ் நிரப்பும் பணியில் தேக்கம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமையல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 நாள் வேலைநிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து சமையல் கியாஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட 3200-க்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் லாரிகளும் இயங்க தொடங்கின.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024