Monday, February 2, 2015

ஒரே மாதிரி பாவாடை - தாவணியில் ‘கிராமத்து பெண்ணாக நடித்து அலுத்து போய்விட்டது’; நடிகை லட்சுமி மேனன் பேட்டி



ஒரே மாதிரி கிராமத்து பெண்ணாக பாவாடை- தாவணி அணிந்து நடித்து, அலுத்து போய்விட்டது ’என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்.

கிராமத்து பெண் வேடம்

‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். கொச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். படித்துக் கொண்டே சினிமாவில் நடித்து வரும் லட்சுமி மேனன், வருகிற மார்ச் மாதம் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்.

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சை பை, ஜிகிர்தண்டா ஆகிய தமிழ் படங்களில் லட்சுமி மேனன் நடித்து இருக்கிறார். பெரும்பாலான படங்களில், கிராமத்து பெண் வேடங்களில் அவர் நடித்து இருக்கிறார். இது பற்றி அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

அலுத்து போய் விட்டது

“எனக்கு ஒரே மாதிரியான கிராமத்து பெண்ணாக பாவாடை-தாவணி வேடம் அணிந்து நடித்து அலுத்து போய்விட்டது. இனிமேல், அது போன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன். ஒரேயடியாக சினிமாவை விட்டு நான் விலகப்போவதில்லை. கதாபாத்திரங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். மீண்டும், மீண்டும் கிராமத்து பெண் வேடங்களே என்னை தேடி வருகின்றன. பாவாடை-தாவணி அழகான உடைதான். ஆனால் எனக்கு கொடுக்கப்படுகிற உடைகள் மிகவும் மலிவாக அமைகின்றன.

எனக்கு ஜீன்ஸ்-டாப்ஸ் மற்றும் சல்வார்-கமீஸ் அணிவதற்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், சினிமாவில் எனக்கு அது போன்ற உடைகளை கொடுப்பது இல்லை. எனவே தான், இனிமேல், குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய பின் ‘பி.காம்’ படிக்க விரும்புகிறேன்.

மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசை

சினிமாவில் நடிப்பது அபூர்வமான வாய்ப்புதான். ஆனால், சினிமாவை நேசித்து நான் படங்களில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. எனக்கு வாய்ப்புகள் அதுவாகவே வந்தன. ‘கும்கி’ படத்தில் நடித்தபோது, சினிமாவில் நடிப்பது மிகவும் அபூர்வமான வாய்ப்பு என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன். ஆனால், அப்போது எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது.

‘கும்கி’ படத்தைப்போலவே தொடர்ந்து கிராமிய பெண் வேடங்களே என்னை தேடி வந்தன. நான் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். இப்போதும் ஆசைப்படுகிறேன். அதற்காக தேசிய விருது பெறக்கூடிய வேடங்களில் தான் நடிப்பேன் என்று நான் சொல்லவில்லை. எனக்கு அதெல்லாம் தேவையில்லை. ‘கஜினி’ படத்தில் அசின் நடித்த மாதிரி மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பிடித்த கதாநாயகன்

எனக்கு ‘ஜிகிர்தண்டா’, வித்தியாசமான படமாக அமைந்தது. சித்தார்த் எனக்கு பிடித்த கதாநாயகன். அவர் எனக்கு பிடித்த நடிகர் என்று சொல்வதில் எந்த பயமும் இல்லை. இப்படி சொல்வதால், மற்ற கதாநாயகர்கள் கோபப்படுவார்களே என்று நான் பயப்படவில்லை. தமிழில் எனக்கு பிடித்த கதாநாயகன் சித்தார்த் தான். ஆனால், இந்திய அளவில் அமீர்கான், ரன்பீர் கபூர் ஆகிய இருவரையும் பிடிக்கும்”

இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024