Tuesday, February 3, 2015

குஷ்பூவை ஏன்தான் இப்படி மாட்டி விடுறாங்களோ?




மதுரை: மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா தோற்றத்தில் சித்தரித்து பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது குஷ்பூவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர் சும்மா இருந்தாலும், அவர் சேருகின்ற கட்சியினர் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிக உச்சத்துக்கு சென்ற நடிகையான குஷ்பூ, பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னி என்பதை கடந்து, கடவுள் நிலைக்கு ரசிகர்கள் அவரை உயர்த்தி வைத்தனர். திருச்சியில் கோயில் கட்டி வழிபாடு நடத்தினார்கள். ஹோட்டல்களில் குஷ்பூ இட்லி விற்கப்பட்டது. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்குப்பின் தங்கர்பச்சன் நடிகைகளை இழிவாக பேசிவிட்டார் என்று சொல்லி அவரை மேடையில் மன்னிப்பு கேட்க வைத்து புரட்சி செய்தார். அதன் பின் ஒரு வார இதழில் திருமணத்துக்கு முன்னாள் பெண்கள் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக் கொள்ளாலாம் என்று பேட்டி கொடுக்க, அதனால், அவருக்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தினார்கள்.

தமிழகம் முழுவதும் நாற்பது நீதிமன்றங்களில் வழக்குகள் போட்டார்கள். அவர் நீதிமன்றத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் செருப்பு, அழுகிய தக்காளிகளை வீசினார்கள். அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டார் குஷ்பூ.

இந்நிலையில் ஜெயா டி.வி.யில் அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சி, அவர் அணியும் ஜாக்கெட்டுகளுக்காகவே பிரபலமானது. அந்த சமையத்தில் அ.தி.மு.க. அனுதாபி போல காட்டி வந்தவர், திடிரென்று தி.மு.க.வில் சேர்ந்து முக்கிய பேச்சாளர் அளவிற்கு பிரபலமானார். இதைத்தொடர்ந்து, சன் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜியாக பணியாற்றினார். இதற்கிடையே குஷ்பூ கற்பை பற்றி பேசியது தவறில்லை என்று நீதிமன்றம் இவரை வழக்கிலிருந்து விடுவித்தது.

தி.மு.க.வில் இருந்து கொண்டே ஸ்டாலினை பற்றி எகிடுதகிடாக பேட்டி கொடுக்க திருச்சியில் இவர் தங்கியிருந்த ஹோட்டல் முன் தாக்குதல் நடத்த தி.மு.க.வினர் திரண்டனர். பின் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை சென்றார். சென்னை வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இப்படி எப்பொழுதும் பரபரப்பாக வலம் வந்தவர் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தார். தோல்வியில் சோர்ந்து கிடந்த காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமானார்கள். அங்கு பல கோஷ்டிகளுக்கிடையே தனியாக குஷ்பூ கோஷ்டி ஒன்று எல்லா ஊர்களிலும் உருவாகிவிட்டது. இதையடுத்து, சமீபகாலமாக மேடைகளில் பா.ஜ.க.வை வெளுத்து வாங்கி வருகிறார்.

இந்நிலையில், பாரத மாதாவாக குஷ்பூவை சித்தரித்து மதுரை காங்கிரஸ்காரர்கள் வைத்த விளம்பர பேனர் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரை, உத்தங்குடி பகுதி இருபத்தி எட்டாவது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசு தின வாழ்த்து சொல்லி வைக்கப்பட்ட பேனரில், இந்தியா வரைபடத்திற்குள், தேசியகொடியுடன் சிங்கத்தின் மேல் பாரத மாதாவாக குஷ்பூ இருப்பதுபோல் சித்தரித்து வைத்திருந்தார்கள். இந்த விளம்பரம் நீண்டநாட்களாக இந்த பகுதியில் காட்சி தந்தும் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகி ஹரிகரன் என்பவர், இந்த பேனர் பாரத மாதாவை இழிவு படுத்துவதுபோல் உள்ளது. எனவே, காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த பேனர் அகற்றப்பட்டாலும் நடவடிக்கை வேண்டுமென்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து வற்புறுத்த இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குஷ்பூவையும் சேர்ப்பார்களா என்பது பற்றி தெரியவில்லை. எப்படியோ இந்த வழக்கின் மூலமாக மீண்டும் குஷ்பூ சர்ச்சைக்குள் வந்து விட்டார்.

இதே போல் சில வருடங்களுக்கு முன் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கன்னிமேரியாக சித்தரித்து தொண்டர்கள் கட்டவுட் வைக்க, பெரும் சர்ச்சையாகி, கிறிஸ்துவர்கள் போராட்டங்கள் நடத்தியதோடு, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தனர்.

அதுபோல் அழகிரியை முருகக்கடவுள் போல் சித்தரித்ததால் இந்து அமைப்புகள் அப்போது போராட்டங்கள் நடத்தின. மேலும், நடிகர் ராஜினி, விஜய் போன்றவர்கள் கடவுளாக சித்தரிக்கப்பட்டதாலும் பல எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார்கள். தற்போது குஷ்பூவும் அதே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

குஷ்பூ என்றாலே பரபரப்புதான்.

செ.சல்மான்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024