Tuesday, February 3, 2015

பேச்சுவார்த்தை தோல்வி: சமையல் எரிவாயு லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது



சென்னை, பிப். 2: தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தோல்வியில் முடிவடைந்தது.

டேங்கர் லாரிகள் வாடகை உயர்வை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்கும் வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உடன்பாடு ஏற்படாதது ஏன்? சமையல் எரிவாயு லாரி வாடகை உயர்வு கோரி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் நான்கு தினங்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

""பேச்சுவார்த்தை தொடங்கிய உடனேயே, வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிடுவதாக லாரி உரிமையாளர்கள் முதலில் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், லாரி வாடகை உயர்வு குறித்துப் பேசுவதற்கு உரிய மும்பை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து வாடகை உயர்வு குறித்துப் பேச ஒப்புக் கொண்டால் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற முடியும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது'' என்று சங்கத்தின் செயலர் கார்த்திக் தெரிவித்தார். இதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

போராட்டத்தின் அடிப்படை என்ன?

வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லப்படவில்லை. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் சுமார் 3,200 எரிவாயு டேங்கர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒரு டன் சமையல் எரிவாயுவை டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்ல 1 கிலோமீட்டருக்கு வாடகையாக ரூ. 2.94-ஐ அதிகாரிகள் முன்பு நிர்ணயித்தனர். இந்த வாடகையை குறைந்தபட்சம் 12 காசுகள் உயர்த்தி ரூ.3.06 என நிர்ணயிக்குமாறு சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாடகை உயர்வை அறிவித்தால் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024