பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்க முடியும் என்ற நிலை இருந்த காலகட்டத்தில் குடும்பத்துக்கு அடக்கமான மருமகள் போன்ற எளிமையுடன், கைக்கு அடக்கமான விலையில் இந்தியச் சாலைகளுக்கு வந்தவை மாருதி கார்கள். அதாவது மாருதி 800 கார்கள்.
புதுப் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பலரின் அபிமானத்தை மிக விரைவிலேயே பெற்று, பல வீடுகளின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே ஆகிவிட்ட வசந்த வாகனம் அது.
மொத்தம் 28 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாருதி 800 கார்கள் தயாரிக்கப் பட்டன. இவற்றில் 26 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்பட்டன. நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இந்தக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏன் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நடுத்தர வர்க்கத்து வீடுகளின் முன்னால், இந்திய நண்பனாக நின்றுகொண்டிருந்தது இந்தக் கார்.
1930-கள், 1940-களில் தங்கள் பணக்காரத் தாத்தாக்கள் வாங்கிய பழைய மாடல் கார்களைப் பார்வைக்கு வைத்துப் பரவசப் படும் நபர்கள் இன்றும் உண்டு. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமாகி இந்தியச் சாலைகளிலிருந்து நம் கண்முன்னே விடைபெற்றுவிட்ட கார் இது.
அடுத்தடுத்து சந்தைக்கு வந்த ‘சொகுசு’ கார்கள், நகரத்துச் சாலைகளில் உற்சாகமாக உலவத் தொடங்கியதும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கின மாருதி 800 கார்கள். இக்கார்களின் தயாரிப்பு, கடந்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டும் விட்டது.
இன்று பல மாருதி கார்கள் எங்கோ புதர் மண்டிய பழைய காரேஜ்களில் மீளாத் துருவில் ஆழ்ந்திருக்கலாம். பல கார்களின் பாகங்கள் இரும்பாலைகளில் உருக்கப்பட்டு வெவ்வேறு வடிவங் களைப் பெற்றிருக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்க வாகனமாகத் திகழ்ந்த இந்தக் கார் பற்றிய நினைவு கள் பலருக்கும் பசுமையாக இருக்கும்.
அப்படி தனது வாழ்நாள் முழுதும் மாருதி 800-ஐ நேசித்தவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்பால் சிங். இந்தியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர்தான் இந்தியாவில் முதன்முதலாக மாருதி 800-ஐ வாங்கிய அதிர்ஷ்டசாலி!
இந்திரா காந்தி கொடுத்த சாவி!
இப்போதெல்லாம் விருப்பமான வாகனத்தை ஷோரூமில் பார்த்து தேர்ந்தெடுத்தவுடன் எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வாகனம் நம் கைக்கு வந்துவிடும். ஆனால், அப்போது நிலைமை அத்தனை எளிதாக இல்லை. அம்பாசிடர் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். மாருதி 800 கார் சந்தைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் அதை வாங்க ஏராளமானவர்கள் ஆர்டர் செய்திருந்தார்கள்.
எனவே, குலுக்கல் முறையில் தேர்வு செய் யப்படுபவருக்கு முதல் காரை வழங்க முடிவுசெய்யப்பட்டிருந் தது. அதிர்ஷ்டம் ஹர்பால் சிங்கின் பக்கம் இருந்தது. குலுக்கல் முறையில் அவர் தேர்வுசெய்யப்பட்ட பின்னர், 1983 டிசம்பர் 14-ல் இந்தியாவின் முதல் மாருதி 800 காரின் சாவியை அவருக்கு வழங்கினார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
பால் போன்ற வெண்மை நிற கார் அது. இந்தியன் ஏர்லைன்ஸில் ஹர்பால் சிங்குடன் பணிபுரிந்த ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹர்பால் சிங்கை வாழ்த்தினார். அவர் ராஜீவ் காந்தி!
‘பாதுகாக்க வேண்டும்’
கார் என்பதையும் தாண்டி தனது குடும்ப உறுப்பினராகவே அதைக் கருதிவந்தார் ஹர்பால் சிங். கடைசி வரை இந்தக் காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்கவில்லை. 2010-ல் அவர் காலமானார். 2 ஆண்டுகளில் அவரது மனைவியும் காலமானார். அதன் பிறகு டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே, எஜமானரைத் தொலைத்துவிட்ட வளர்ப்பு நாய் போல் இயக்கமற்று கிடக்கிறது அந்தக் கார். சிங் தம்பதியினரின் இரு மகள்களால் காரைப் பராமரிக்க முடியவில்லை.
“எங்களுக்குப் பணமே வேண்டாம். மாருதி நிறுவனம் இந்தக் காரைப் பெற்றுக்கொண்டு நல்ல முறையில் பராமரித்துப் பாதுகாத்தாலே போதும். மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளரான எனது மாமனாரின் பெயர் இதன் மூலம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் ஹர்பால் சிங்கின் மருமகன்களில் ஒருவரான தேஜிந்தர் அலுவாலியா.
இதற்கிடையே, “மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளர் எனும் முறையில் ஹர்பால் சிங் எங்கள் மரியாதைக்குரியவர். காரை மிகுந்த அக்கறையுடன் பராமரித்தவர் அவர். அவரது குடும்பம் விரும்பினால் அதை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயார்” என்று மாருதி சுஸுகியின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
அந்தத் தகவலுக்காக, மேலுலகத்திலிருந்து மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார் ஹர்பால் சிங்!
chandramohan.v@thehindutamil.co.in