By க. பழனித்துரை
First Published : 04 December 2015 01:38 AM IST
இன்றைய தமிழகத்தில் கடுமையான மழைக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை பற்றிய விவாதம் எங்கும் எதிரொலிக்கிறது. இந்த விவாதம் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே நடத்தப்படுகின்றது. ஓர் அறிவார்ந்த விவாதத்தை நம்முடைய ஊடகங்களில் நம்மால் பார்க்க முடியவில்லை. அனைத்தையும் அரசியலாகப் பார்ப்பது என்பது நம்மைத் தரம் தாழ்த்துகின்றது.
யார் செய்தது தவறு என்பதுதான் இன்று விவாதமாக உள்ளது. இவை எல்லாவற்றையும்விட இந்தப் பேரிடரை வைத்து அரசியல் லாபம் பார்க்க முயல்வது நாம் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்துள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.
வெள்ளப் பெருக்கு, விவசாய அழிவு, தொற்று நோய் அபாயம், வாழ்வாதாரம் பாதிப்பு, பொதுச் சொத்துகள் சேதம் என பிரச்னைகள் அடுக்கப்பட்டு விவாதம் நடைபெறும் போது, நமக்கு எழும் ஒரே கேள்வி, நாம் இதுவரையில் இப்படிப்பட்ட இயற்கைப் பேரிடரைச் சந்தித்ததே இல்லையா? நிறைய சந்தித்து இருக்கின்றோம் என்பதை நம் வரலாறு காட்டுகின்றது. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? அப்படி கற்றுக்கொண்டோம் என்றால் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்று நமக்கு ஏன் இந்தத் தருணத்தில் உதவிடவில்லை என்பதுதான் நமது அடுத்த கேள்வி.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். திறமையாகச் சமாளித்தோம்.
அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை என்பதுதான் இன்றைய கேள்வி. சுனாமி தாக்கிய பிறகு, நம்மிடம் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஒன்று தேசிய அளவில் உருவாக்கப்பட்டுவிட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை பேராயம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு பெரு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
இந்தச் சட்டப்படி, மாநிலப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் மற்றும் மாவட்டப் பேரிடர் மேலாண்மை பேராய மையம் என அதிகாரப்படுத்தப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டன. சட்டத்தின்படி, அப்படி உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகள் செயல்படவில்லை என்றால் அதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. அதற்கு முழுப்பொறுப்பு மாநில அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் அனைவருமே.
எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், அறிவுஜீவிகளும் குறைசொல்வதற்கு மட்டும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. வானிலை மையம் தரும் செய்திகளை வைத்து பேரிடர் தயார் நிலைக்கு பொதுமக்களைக் கொண்டுவர உள்ளாட்சிக்கு அதிகாரம் அளிக்கும் ஆணையும் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு அமைப்புகள், அதிகாரங்கள் இருந்தும் இன்னும் நம் கிராமங்களிலும், நகரங்களிலும் ஏன் பேரிடர் தயாரிப்பு நிலைக்கு மக்களைக் கொண்டுவரவில்லை?
உலகம் முழுவதும் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதுதான் நம் உயிர், உடைமைகளை பாதுகாத்திட வழிவகை செய்யும். அதுதான் அழிவுகளைக் குறைத்திடும். எனவேதான், ஐ.நா. நிறுவனங்கள் பேரிடர் தடுப்பு தயாரிப்பிற்கு மக்களைத் தயார் செய்வதை முன்னிலைப்படுத்துகின்றன.
ஆனால், நம் மக்களை இன்னும் நிவாரணம் பெறும் மனோபாவத்தில்தான் வைத்துள்ளோம். எனவேதான், எங்குபார்த்தாலும் நம் மக்கள் எங்களை வந்து யாரும் பார்க்கவில்லை, எதுவும் தந்திடவில்லை என்று ஓலமிடுகின்றனர். நம் மக்களாட்சியில் கூக்குரல் போட்டால்தான் நம் அரசை தம் பக்கம் திருப்பமுடியும் என்பதை அறிந்துதான் மக்கள் இப்படி கூக்குரல் எழுப்புகின்றனர். ஏன் என்றால், நிவாரணம் பெறத் தான் இவ்வளவு கூக்குரல்.
பேரிடர் என்பது தொடர்ந்து நிகழ்ந்து பொதுமக்களின் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் அழிவுகளை ஏற்படுத்துவதால், ஆண்டுதோறும் நடைபெறும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் பேரிடர் தடுப்பு தயாரிப்புக்கான பார்வையும், செயல்பாடுகளும் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசின் கொள்கையாக வகுக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக இயற்கைப் பேரிடர் நிகழ்கின்ற சூழலில், உள்ளாட்சிகள்தான் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ÷பேரிடர் தடுப்பு தயாரிப்பு நிலை செயல்பாடுகளை எடுக்க வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் நம் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருந்தும், உள்ளாட்சிகள் அந்த அளவுக்கு கவனத்துடன் இயங்கவில்லை என்பதும், அதற்கான சூழலை உள்ளாட்சிக்கு உருவாக்கித் தரவில்லை என்பதும், தங்களுக்குப் பேரிடர் மேலாண்மையில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றியும், நம் உள்ளாட்சியில் உள்ள தலைவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தெரியவில்லை என்பதுதான் இன்று நாம் பார்க்கும் யதார்த்தமான உண்மை.
சுனாமிக்குப் பிறகு தமிழகத்தில் ஐ.நா. நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தும், பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கத் தான் மிகப் பெரிய அளவில் செயல்பட்டன. இதன் விளைவுகளை இன்று எந்த இடத்திலும் நம்மால் பார்க்க இயலவில்லை.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் சுனாமிக்குப் பிறகு பேரிடர் தடுப்பு தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, நிவாரணம், போன்ற தலைப்புகளில் பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்து, அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட்டு செய்தித்தாள்களில் செய்திகள் வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழகத்தில் சுனாமி தாக்குவதற்கு முன்பே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, பேரிடர் தயார்நிலைக்கு என்று ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அது பெயரளவுக்கு இயங்கினாலும், அந்தக் குழுக்களுக்கு ஐ.நா. நிறுவனம் மூலம் அப்பொழுதே பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது.
அப்படிப் பயிற்சி பெற்ற பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் செயல்பட்ட பஞ்சாயத்துகளில், சுனாமியின் பாதிப்பு மிகவும் குறைவு என்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்து தெரிவித்திருந்தனர். சுனாமிக்குப் பிறகு இவையெல்லாம் பழங்கதையாயின என்பது போலத்தான் நமக்குத் தெரிகிறது.
உலகம் முழுவதும் சமூக பங்கேற்புடன் கூடிய வறுமைக் குறைப்பு, வாழ்வில் தாழ்வுற்றோரை அதிகாரப்படுத்துதல், மக்கள் பங்கேற்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடு அனைத்தும் வெற்றித் தடங்களைப் பதிக்கின்றபோது, நம்மிடம் பேரிடர் தடுப்பு தயாரிப்பில் மட்டும் ஏன் இந்த பொறுப்பற்ற தன்மை?
நாமே அரசாகத் திகழும்போது, அரசிடமிருந்து யாரும் வரவில்லை என்று கூக்குரலிடுவது, மீண்டும் பயனாளியாக இருக்க, மனுதாரராக இருக்க ஆசைப்படுவதுதான். மக்களாகிய நாம் உள்ளாட்சியுடன் இணைந்து பேரிடரைச் சமாளிக்கும் போது நம் உள்ளாட்சிக்கு மாநில, மைய அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்காக நாம் போராடலாம்.
ஆனால், நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், எங்களை யாரும் பார்க்க வரவில்லை, எதுவும் தரவில்லை என்று ஓலமிடுவது, அல்லது அந்த நிலைக்கு மக்களை வைத்திருப்பது ஒரு வளர்ந்த மாநிலத்திற்கு ஏற்புடையதல்ல.
உலகத்தில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இப்படிப்பட்ட பேரிடர் நடந்தபோது யார் செயல்பட்டது என்று பாருங்கள். அது உள்ளாட்சிதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உள்ளாட்சிகள் செயல்படாமல் இருந்தபோது அந்த ஆட்சியில் இருந்தவர்களை சட்டப்பூர்வமாக தண்டித்திருக்கின்றார்கள். இன்று நாம் உள்ளாட்சி அமைப்புகளை எடுபிடிகளாக வைத்துள்ளோம்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது, அந்த நகர மேயர்தான் எல்லாப் பணிகளையும் செய்தார். அதற்கான தலைமை, அதிகாரம், அதிகாரிகள், நிதி அனைத்தும் அவர்களுக்கு அரசாங்கம் தந்துள்ளன. உள்ளாட்சிகளை வலுப்படுத்துவது என்பது மக்களுக்குப் பக்கத்தில் அரசுக் கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருப்பது.
அது மட்டுமல்ல, பொதுமக்களை அந்தக் கட்டுமானங்களுடன் இணைத்து வைத்திருப்பது. இந்தச் சூழல் உருவானால் பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பு வந்தாலும் அவர்கள் முழுப்பொறுப்புடன் முழுவேலையில் இருப்பார்கள். ஆனால், நம் அரசுக் கட்டமைப்புகள் பொதுமக்களைத் தூரத்தில் வைத்துக்கொள்ள நினைக்கின்றன. ஓர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.
இந்த இடைவெளிதான் அரசின் நல்ல செயல்பாடுகளைக்கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைக்கின்றது. இடைவெளி இல்லை என்றால் அரசுச் செயல்பாடுகளை யாரும் குறை கூற முடியாது. ஏனென்றால், அதில் பொதுமக்கள் இருக்கின்றார்கள். உள்ளாட்சியை வலுப்படுத்தாமலும், மக்களை உள்ளாட்சியில் இணைக்காமலும் இருந்தால் மக்கள் தூரத்தில் நின்று ஓலம் இடுவதிலும், என்ன செய்தாலும் நிறைவில்லாமலும், தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதில் அரசியல்வாதிகள் அரசியல் லாபம் பார்க்கத்தான் செய்வார்கள். இதைத் தவிர்க்க இயலாது.
எனவே, நமக்குத் தேவை பேரிடர் தடுப்பு, சமாளிப்பு. அதற்கு உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் அந்த உள்ளாட்சி மக்கள் கையில் இருக்க வேண்டும். இதுதான் நம் இன்றைய மிக முக்கியத் தேவை.
2004-ஆம் ஆண்டு உலகை குலுக்கிய சுனாமியைவிடவா இந்தப் பேரிடர் சக்தி வாய்ந்தது. அதை நாம் சமாளிக்கவில்லையா? நாம் சமாளித்தோம். அப்படியெனில், அதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஏன் நாம் இன்று பயன்படுத்தவில்லை?