எம்ஜிஆர் 100 | 37 - ‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்M.G.R. நடித்து வெளியாகி பெருவெற்றி பெற்று, அதன் பிறகு வெளியான பல படங்கள் அதே ஃபார்முலாவை பின்பற்றும் அளவுக்கு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’. இது வெறும் படத்தின் பெயர் மட்டுமல்ல; இந்தப் பெயரை சொல்லி உரிமை கொண்டாடும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்த காயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’ என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரை வர் மறுத்தார். பெற்ற மனம் கேட் குமா? மகனைக் காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம் பிக்கை பிறந்தது அந்தத் தாய்க்கு. எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டார். அந்த தாயின் வேண்டுகோளை ஏற்று மருத் துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.
சூரியனைக் கண்ட பனி போல டிரைவ ரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லா மல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம் மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப் பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார்.
நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப் பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில் இது...
‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத் தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் சகோதரனாக நினைத்துத்தான் உதவி செய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும். அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’
‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென் போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவர் அல்ல, அதன்படியே வாழ்ந்தவர்.
1967-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். துப்பாக்கி யால் சுடப்படுவதற்கு முன் அங்கு பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார். எம்.ஜி.ஆரை பார்த்த ஒரு மூதாட்டி அன்புடன் அவருக்கு சோடா வாங்கிக் கொடுத்தார். அவரை எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலம். தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் அந்தப் படம் முக்கிய இடம் பிடித்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?...’ பாடல் காட்சி மதுரை வைகை அணையில் படமாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் எம்.ஜி.ஆரை பார்க்கத் திரண்டனர். மக்கள் தாகத்தில் தவிக்கக் கூடாது என்று 2 லாரிகளில் தண்ணீரும் மோரும் கொண்டு வரச் சொல்லி திரண்டிருந்த மக்களுக்கு கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.
பயங்கர கூட்டம், எந்தப் பக்கம் திரும் பினாலும் மக்கள் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார். அவரிடம் பரிவோடு பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குடும்பம் குறித்து விசாரித்தார்.
‘‘உங்களுக்கு பிள்ளைகள் இருக் காங்களாம்மா?’’
‘‘இருக்காங்கப்பா’’ என்று பதிலளித்த மூதாட்டியிடம், ‘‘என்ன பண்றாங்க?’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘ஒரு புள்ள பட்டாளத்துல இருக்கு. இன்னொரு புள்ள சினிமாவுல இருக்கு’’
மூதாட்டியின் இந்த பதிலால் எம்.ஜி.ஆருக்கு வியப்பு. சினிமாவில் இருக்கிறார் என்றால் நிச்சயம் தனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியபடியே கேட்டார்… ‘‘சினிமாவில் இருக்கும் பிள்ளையின் பெயர் என்ன?’’
‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’
பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்
இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்.தான். அவர் முதல்வராக இருந்தபோது குடிசைவாழ் மக்களுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக 2-7-1985 அன்று சென்னை துறைமுகம் பகுதியில் குடிசைவாசிகளுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.