Wednesday, April 6, 2016

குறள் இனிது: ஆராயாத தேர்வு... தீராத தொல்லை!

குறள் இனிது: ஆராயாத தேர்வு... தீராத தொல்லை!

சோம.வீரப்பன்
எனக்குத் தெரிந்த ஒருவர் வங்கி பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவருக்கு பேசிக்கொண்டே இருப்பது பிடிக்கும்! இரண்டு அவரால் வங்கியின் கிளைகளில், களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை! அவர் பெயர் குமார் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

இம்மாதிரியான பயிற்சிகளின் நோக்கம் என்ன? வங்கியின் சேவைகள் குறித்த அறிவை வளர்ப்பது; வாடிக்கையாளர்களைக் கவரும்படி பேசுவது, பணியாளர்களிடம் வேலை வாங்குவது போன்ற திறமைகளை மேம்படுத்துவது என்பவை மட்டுமில்லையே? பயிற்சி பெறுபவரின் அணுகுமுறையை (attitude) நல்வழிப்படுத்துவதும் தானே? அதாவது பணி செய்யும் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணத்தை, அக்கறையை அதிகரிப்பது, நிர்வாகத்தின்மேல் நம்பிக்கையைக் கூட்டுவது,வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போன்றவையும் தானே?

அப்படியானால், பயிற்சி பெற்று திரும்புபவர் பயிற்சிக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருக்க வேண்டுமில்லையா?

ஆனால் குமாரிடம் பயின்றவர்கள் ஏதோ சில புதிய கலைச்சொற்களைக் (jargons) கற்று வந்தார்களே தவிர, வங்கியின்பால் இருந்த ஈர்ப்பு முன்பிருந்ததைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது. காரணம், அவர் வங்கியின் பாரம்பரியத்தை, அது பல சவால்களை எதிர்கொண்டு மீண்டது போன்றவற்றைச் சொல்லாமல், போட்டி அதிகமாகி விட்டதாகவும் எதிர்காலம் அச்சுறுத்துவதாகவும் கூறித் தம் வங்கியைத் தாழ்த்தியே பேசுவார்.

உணவு வேளைகளிலோ, வங்கியின் உயரதிகாரிகள் என்ன உங்களை எல்லாம் விட அனுபவசாலிகளா? சும்மா காக்கா பிடித்து மேலே போய் நம்மையே அதிகாரம் பண்ணுகிறார்கள்' என்கிற ரீதியில் பேசுவார்! விளைவு? ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு வரும் சுமார் 50 பேர் மனதில் விஷம் விதைக்கப்பட்டது! சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகி விட்டது வங்கிக்கு. பயிற்சி பெற்றுத் திரும்பியவர்கள் தங்கள் பங்கிற்குத் தத்தம் அலுவலகங்களில் இம்மாதிரியான தவறான கருத்துகளைப் பரப்பலானார்கள். தேவையின்றி வங்கியின்பால் கசப்புணர்ச்சியே பரவியது!

ஒருவரைச் சரியாக ஆராயாமல் பணியமர்த்தினால், அது வழிவழியாகத் துன்பத்தைத் தரும் என்கிறது குறள். பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பணியாளரின் திறமையையும் குணத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் வேலை கொடுத்தால் யாருக்கும் இதே கதிதான்! யோசித்துப் பாருங்கள். மற்றவர் தவறுகளை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய ஆய்வுத் துறையில் பணியமர்த்தப்பட்டவரே சரியில்லையெனில் என்னவாகும் ? விளம்பரங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சில நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் அத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள்.

நம் நாட்டில் பிரதம மந்திரிகள் மாறினாலும் அணுசக்தி, விண்வெளி இலாகாக்கள் பிரதமரை விட்டு மாறுகின்றனவா? நம்பிக்கைக்குரிய விஞ்ஞானிகள் இருப்பதனால் தான் இஸ்ரோ ஒரே சமயத்தில் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் விரைவில் ஏவவுள்ளது தம்பி!

பணக்காரர்கள் இறந்தபின் கோடிக்ணக்கான சொத்துக்கள் அவர்களது பணியாளர்கள் பெயரிலேயே உயில் எழுதி வைக்கப்பட்டிருப்பது தெரியவரும் காலமிது! தீர விசாரித்தே பணியமர்த்துங்கள் அண்ணே!!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் (குறள் 508)

- somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024